சூளகிரி அருகே மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது உடந்தையாக இருந்த மாமியாரும் சிக்கினார்

சூளகிரி அருகே மனைவியை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்ட கணவரையும், உடந்தையாக இருந்த மாமியாரையும் போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-16 22:30 GMT
ஓசூர், 

இந்த கொலை சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே உள்ள ஏனுசோனை கிராமத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன்(வயது 41). இவரது மனைவி சரஸ்வதி(32). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இந்த தம்பதிக்கு ஹேமாஸ்ரீ (9) என்ற மகள் இருக்கிறாள். கடந்த 8 ஆண்டுகளாக ராமச்சந்திரன் தனது மனைவியை பிரிந்து கர்நாடக மாநிலம் பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியில் தங்கி சொந்தமாக கார் ஓட்டி வருகிறார்.

ஹேமாஸ்ரீயும், தனது தந்தையுடன் தங்கியிருந்து 3-ம் வகுப்பு படித்து வருகிறாள். சரஸ்வதி, ஏனுசோனை கிராமத்தில் மாமியார் சித்தம்மாவுடன் (65) வசித்து வருகிறார். ராமச்சந்திரன் தனது தாயை பார்ப்பதற்காக அடிக்கடி ஏனுசோனை கிராமத்திற்கு சென்று வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் சம்பவத்தன்று இரவு ராமச்சந்திரன் பெங்களூருவில் இருந்து ஏனுசோனை கிராமத்திற்கு வந்தார். அப்போது கணவன், மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் ஆத்திரம் அடைந்த ராமச்சந்திரன், சரஸ்வதியின் கழுத்தை நெரித்துள்ளார். அதில் மயங்கி விழுந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த ராமச்சந்திரன், சரஸ்வதியின் உடலை வீட்டில் உள்ள ஒரு அறையில் தூக்கில் தொங்க விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது குறித்து சரஸ்வதியின் தந்தை திம்மராயப்பா சூளகிரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சரஸ்வதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தப்பி ஓடிய ராமச்சந்திரனை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று சூளகிரியில் பதுங்கியிருந்த அவரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதை ஒப்புக்கொண்டார். இதைத் தொடர்ந்து ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்ததாக சித்தம்மாவையும் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவம் சூளகிரி அருகே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்