புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு ஊராட்சி மலைக்கிராமங்களில் ரூ.8¾ கோடியில் சாலை வசதி : ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகு அமைக்கப்படுகிறது
ஆலங்காயம் ஒன்றியத்தில் உள்ள புதூர்நாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய ஊராட்சி மலைக்கிராமங்களில் ஆங்கிலேயர் காலத்திற்கு பிறகு முதல் முறையாக ரூ.8¾ கோடியில் சாலை வசதி செய்து தரப்படுகிறது.
வேலூர்,
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மற்றும் ஆலங்காயம் பகுதிகளில் மலைக்கிராமங்கள் அதிகம் உள்ளன. ஆலங்காயம் ஒன்றியத்தில் புதூர் நாடு மற்றும் நெல்லிவாசல்நாடு ஆகிய ஊராட்சிகள் மலைப்பகுதியில் அமைந்துள்ளன. இதில் புதூர்நாடு ஊராட்சியில் புதூர் நாடு, மொழலை, சித்தூர், அருமல்பட்டு, வழுதலம்பட்டு, நடுகுப்பம், விளாங்குப்பம், கோம்பை, மேலூர், கீழூர் ஆகிய கிராமங்கள் உள்ளன. 3,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
அதேபோல் நெல்லிவாசல்நாடு ஊராட்சியில் நெல்லிவாசல்நாடு, நெல்லிப்பட்டு, சேம்பறை, மேல்பட்டு, புலியூர், வலசை, மலைதிருப்பத்தூர், மலையாண்டிப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் 6,500–க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கிறார்கள்.
மலைக்கிராமங்களில் வசிக்கும் மக்கள் விவசாயத்தை மட்டுமே முக்கியத் தொழிலாக கொண்டுள்ளனர். குறிப்பாக மலைவாழை அதிகளவில் பயிரிட்டு வருகிறார்கள். தாங்கள் விளைவிக்கும் விவசாய பயிர்களை சந்தைக்கு கொண்டு செல்ல வேண்டுமானால் திருப்பத்தூர், செங்கம், சிங்காரப்பேட்டை போன்ற பகுதிகளுக்கு தான் செல்ல வேண்டும்.
தங்கள் முக்கியத்தேவைகளுக்கும் இந்தப் பகுதிகளுக்கே சென்று வருகிறார்கள். ஆனால் இவர்கள் சென்று வருவதற்கு எந்தவித சாலை வசதியும் கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் இந்தப் பகுதிகளில் சாலை அமைக்கப்பட்டு இருந்ததாகவும், அந்தப் பகுதி வனத்துறையின் கீழ் வருவதாலும் சாலை அமைக்க முடியாத நிலை ஏற்பட்டதோடு, இருந்த சாலையையும் பராமரிக்காமல் விட்டு விட்டனர். இதனால் சாலைகள் இருந்த இடம் தெரியாமல் போய், ஒத்தையடிப் பாதையாக, கரடு முரடாக மாறிவிட்டது. இதனால் மலைக்கிராம மக்கள் சாலை வசதியே இல்லாமல் சிரமப்பட்டு வந்தனர்.
இதுகுறித்து பல போராட்டங்கள் நடத்தப்பட்டது. தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்றும் தெரிவித்தனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் தீவிர முயற்சி மேற்கொண்டு சாலை அமைக்க அரசிடம் இருந்து சிறப்பு அனுமதி பெறப்பட்டு ரூ.8 கோடியே 79 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து புதூர்நாடு முதல் நெல்லிவாசல்நாடு வரை, நெல்லிவாசல்நாடு முதல் சிங்காரப்பேட்டை வரை சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதூர்நாடு முதல் நெல்லிவாசல் நாடுவரை 13.90 கிலோ மீட்டர் தூரம், நெல்லிவாசல்நாடு முதல் சிங்காரப்பேட்டை வரை 11.50 கிலோ மீட்டர் தூரம் என மொத்தம் 25.40 கிலோ மீட்டர் தூரம் வனத்துறை மூலம் சாலை அமைக்க திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கியது.
அதில் முதல்கட்டமாக தற்போது வரை புதூர்நாடு முதல் நெல்லிவாசல்நாடு வரை 13.90 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் பணி முடிவடைந்துள்ளது. இந்த பணிகள் எவ்வாறு நடக்கிறது என்பது குறித்து கலெக்டர் ராமன் ஆய்வுசெய்தார்.
அப்போது மலைக்கிராம மக்கள் ஆங்கிலேயர் காலத்துக்கு பிறகு இப்போது தான் எங்கள் கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட்டுள்ளது. எங்கள் காலத்தில் சாலையை பார்க்கமுடியாமல் போய் விடுமோ என்று நினைத்தோம். தற்போது சாலை வசதி செய்து தரப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது, என்று கூறினர்.