மாஞ்சோலை பகுதியில் முழுமையாக செல்போன் சேவை கிடைக்க நடவடிக்கை - பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தகவல்
மாஞ்சோலை பகுதியில் முழுமையாக செல்போன் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.
நெல்லை,
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையில், அம்பை அருகே மணிமுத்தாறு அணைக்கு மேல் மாஞ்சோலை அமைந்துள்ளது. இந்த பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் தேயிலை தோட்டம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு, ஊத்து ஆகிய இடங்களில் 600-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் தங்கி இருந்து தோட்ட வேலை செய்து வருகின்றனர்.
தகவல் தொழில்நுட்ப புரட்சியால் நாட்டில் உள்ள அனைத்து மக்களின் கைகளிலும் தற்போது செல்போன் தவழ்கிறது. பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்தி வந்த செல்போனில் தற்போது இணையதள சேவையுடன், அது ஒரு சிறிய கணினி போல் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு பல்வேறு தனியார் நிறுவனங்களும் போட்டி போட்டு சேவைகளை அளிக்கிறது. ஆனால் மாஞ்சோலையில் வசிக்கும் மக்களுக்கு அரசு சார்ந்த நிறுவனமான பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. அங்குள்ள மக்கள் அனைவரும் இந்த செல்போன் சேவையை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அதற்கும் சோதனை ஏற்பட்டு உள்ளது. அதாவது கடந்த சில நாட்களாக செல்போன் சேவை கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
அதாவது கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போன் கோபுரத்துக்கு உரிய மின் கட்டணத்தை செலுத்தவில்லை என்று கூறி, மின்சார வாரியம் மின் இணைப்பை துண்டித்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் ஒட்டுமொத்த செல்போன் சேவையும் அடியோடு பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நிலைமை ஓரளவுக்கு சரியானதாக கூறப்படுகிறது. ஆனாலும் இரவு நேரத்தில் செல்போனுக்கான சேவை முற்றிலும் துண்டிக்கப்பட்டு விடுகிறது. காலை 10 மணிக்கு பிறகு செல்போன் கோபுரத்தை இயக்கி சேவை வழங்கப்படுகிறது. பின்னர் அதுவும் மாலை 6 மணி அளவில் மீண்டும் நிறுத்தப்பட்டு விடுகிறது. இதிலும் அவ்வப்போது சரியாக அலைவரிசை கிடைப்பதில்லை. எனவே இந்த பிரச்சினையை சரி செய்துதர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேயிலை தோட்ட ஊழியர் அமுதா கூறுகையில், “20 நாட்களுக்கும் மேலாக பி.எஸ்.என்.எல். செல்போன் சேவை கிடைக்கவில்லை. இதனால் எங்களுடைய உறவினர்களை தொடர்பு கொண்டு முக்கிய தகவல்களை தெரிந்து கொள்ள முடியவில்லை. எனவே 24 மணி நேரமும் செல்போன் சேவை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார். தொழிற்சாலை மெக்கானிக் கணேசன் கூறுகையில், “செல்போன் சேவை மின்சார துண்டிப்பு பிரச்சினையால் முடங்கி கிடந்தது. தற்போது ஜெனரேட்டரில் டீசல் ஊற்றி பகல் நேரத்தில் மட்டும் செல்போன் சேவை வழங்கப்படுகிறது. என்னுடைய மகன் கப்பலில் வேலை செய்து வருகிறார். அவர் மும்பைக்கு வந்து நெல்லைக்கு வருவதாக கூறினார். ஆனால் அவரிடம் இருந்து உரிய தகவலை பெறமுடியவில்லை. இதேபோல் அனைத்து தொழிலாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்” என்றார். தொ.மு.ச. தொழிற்சங்க செயலாளரும், தோட்ட மேற்பார்வையாளருமான கருத்தப்பாண்டி கூறுகையில், “ஊத்து, நாலுமுக்கு, குதிரைவெட்டி பகுதிகளில் சிக்னல் சுமாராக கிடைக்கிறது. சில நேரங்களில் காலை 10 மணிக்கு பதிலாக 11 மணிக்கு செல்போன் சேவை கிடைக்கிறது. எனவே 24 மணி நேரமும் செல்போன் சேவை வழங்கவேண்டும்.
ஜெயராஜ் என்பவர் கூறுகையில், “யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாவிட்டால் மாஞ்சோலைக்கு வந்து செல்லும் பஸ் டிரைவர், கண்டக்டரை தொடர்பு கொண்டு குறிப்பிட்ட மருந்து, மாத்திரைகளை வாங்கி வருமாறு கேட்போம். அவர்களும் வாங்கி தந்து உதவி செய்வார்கள். ஆனால் தற்போது அவ்வாறு தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் எங்களுக்கு 2ஜி அலைவரிசை மட்டுமே கிடைக்கிறது. இதனை 3ஜி அலைவரிசையாக உயர்த்த வேண்டும்” என்றார்.
சுப்பையா பாண்டியன் கூறுகையில், “செல்போன் கோபுரத்தில் மின்தடை ஏற்பட்டாலும் தொடர்ந்து அலைவரிசை வழங்குவதற்கு தேவையான பேட்டரி வசதி இல்லை என்று கூறுகிறார்கள். எனவே அந்த வசதியும் செய்ய வேண்டும்” என்றார்.
இதுகுறித்து நெல்லை மற்றும் அம்பை பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் கூறுகையில், “மாஞ்சோலை பகுதியில் செல்போன் பிரச்சினை சரிசெய்யப்பட்டு வருகிறது. மாஞ்சோலை பகுதியில் மட்டும் தற்போது சேவை முழுமையாக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, காக்காச்சி போன்ற பகுதிகளில் செல்போன் சேவை படிப்படியாக சரியாகி விடும்” என்றனர்.