மாணவர்கள் விரும்பும் படிப்புகளில் கூடுதல் இடங்கள் உருவாக்கப்படும் - அரசு செயலாளர் அறிவிப்பு

மாணவர்கள் விரும்பி படிக்கும் படிப்புகளில் கூடுதல் இடங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கல்வித்துறை செயலாளர் அன்பரசு கூறினார்.;

Update: 2019-05-14 22:45 GMT
சென்டாக் மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டு கல்வித்துறை செயலாளரும், சென்டாக் தலைவருமான அன்பரசு நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

உயர் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு தற்போது மாணவ, மாணவிகள் வருவாய்த்துறை வழங்கும் சாதி, குடியுரிமை, இருப்பிடம், வருமானம் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த சான்றிதழ் பெற முயற்சித்து வருகின்றனர். இதனை பெற காலதாமதமும் ஏற்படுகிறது. எனவே மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடும் செய்துள்ளோம்.

ஏற்கனவே வாங்கப்பட்ட ஒருங்கிணைந்த சான்றிதழ் புதுப்பிக்கப்படாமல் இருந்தாலும் அதை சமர்ப்பிக்கலாம். அதன்படி இடம் ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இடம் கிடைத்தவர்கள் ஜூன் மாதம் இறுதிக்குள் வருவாய்த்துறையின் புதிய சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

மதிப்பெண் பட்டியலை தமிழக அரசிடம் பேசி பெற்றதைப்போல் வருவாய்த்துறையின் சான்றிதழையும் பெற ஏற்பாடு செய்து வருகிறோம். இது அடுத்த ஆண்டு அமலுக்கு வரும். வரும் காலங்களில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பினை பிப்ரவரி மாதமே வெளியிட ஏற்பாடு செய்யப்படும்.

மாணவர்கள் வணிகவியல், பொருளாதாரம், கார்ப்பரேட் செக்கரட்டரி உள்ளிட்ட படிப்புகளில் சேர அதிக அளவில் விருப்பம் தெரிவிக்கின்றனர். எனவே மாணவர்கள் விரும்பும் அந்த படிப்புகளில் கூடுதல் இடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்ச்சி விகிதம் அதிகரித்துள்ளது. எனவே மேற்படிப்புகளில் 800 முதல் 900 பேர் வரை அதிகமாக சேருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள 4 ஆயிரத்து 923 இடங்களில் 4 ஆயிரத்து 853 இடங்கள் மட்டுமே நிரம்பின. அதிலும் புதுவையில் உள்ள கல்லூரிகளில் அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன. மாகி, ஏனாம் கல்லூரிகளில்தான் காலியிடங்கள் ஏற்பட்டது.

மாணவர்களின் தேவைக்காக சில கல்லூரிகளை ஷிப்டு முறையில் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கல்லூரி பேராசிரியர் பணியில் 50 காலியிடங்கள் வரை உள்ளது. அதை நிரப்ப யு.பி.எஸ்.சி.க்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அன்பரசு கூறினார்.

மேலும் செய்திகள்