துறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருட்டு

துறையூர் அருகே வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகையை திருடிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.;

Update:2019-05-15 03:45 IST
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த திருமானூர் கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (வயது 80), மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று காலையில் இவர், வீட்டை பூட்டிவிட்டு நெட்டவேலம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டுக்கு குடும்பத்துடன் சென்றார். பின்னர் இரவு 10 மணி அளவில் வீட்டுக்கு திரும்ப வந்தார். அப்போது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 25 பவுன் தங்க நகைகள், ரூ.65 ஆயிரம் ஆகியவை திருட்டு போய் இருந்தது தெரிய வந்தது.

பணம் திருட்டு

இதேபோல் பக்கத்து வீட்டை சேர்ந்த விசாலாட்சி (75) என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்ற மர்மநபர்கள் பீரோவை திறந்து அதில் இருந்த ரூ.12 ஆயிரத்தை திருடி சென்றனர். அதேபோல் பக்கத்துவீட்டை சேர்ந்த சுந்தரம் (50) என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்தும், மர்மநபர்கள் உள்ளே சென்றுள்ளனர். அங்கு நகை-பணம் எதுவும் இல்லாததால் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வீசி சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரும் தனித்தனியாக துறையூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர். 

மேலும் செய்திகள்