கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 4 டன் மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை

கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயன பவுடர் மூலம் பழுக்க வைத்த 4 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Update: 2019-05-14 20:33 GMT
பூந்தமல்லி,

கோடைகாலம் தொடங்கியதையடுத்து உடலை குளிர்ச்சியாக்க பழங்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் விளையும் பல வகையான பழங்கள் நேரடியாக கோயம்பேடு மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து கடைகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்த நிலையில் பழங்களை விரைவாக பழுக்க வைக்க வேண்டும் என்பதற்காக கார்பைடு கற்கள் மற்றும் எத்திலீன் பவுடர் மூலம் பழங்களை பழுக்க வைக்கும் பழக்கம் இருந்து வருகிறது. இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் அடிக்கடி கோயம்பேடு மார்க்கெட்டில் சோதனை நடத்தி பழங்களை பறிமுதல் செய்து வந்தனர்.

4 டன் மாம்பழங்கள் பறிமுதல்

இதையடுத்து நேற்று கோவிந்தராஜன் தலைமையில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கோயம்பேடு பழ மார்க்கெட்டில் சோதனை செய்தனர். அப்போது எத்திலீன் பவுடர் மூலம் பழுக்க வைத்த சுமார் 4 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், எத்திலீன் ரசாயன பவுடரை வைத்து பழுக்க வைக்கும் பழங்களை சாப்பிட்டால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும். எனவே இதுபோன்று தொடர்ந்து விதிமுறை மீறி பழங்களை வியாபாரிகள் பழுக்க வைத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்