திருமங்கலத்தில் ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது

ஆட்டோ டிரைவரிடம் செல்போன் பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2019-05-14 19:50 GMT
பூந்தமல்லி,

திருமங்கலம், பெரியார் நகர், பாடி குப்பம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). டிரைவரான இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று திருமங்கலம் பகுதியில் ஆட்டோ அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் மணிகண்டன் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் சென்றார். உடனே ஆட்டோ டிரைவர் அவரை விரட்டிச் சென்றார்.

இந்தநிலையில் திருமங்கலம் சிக்னல் அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு செல்போன் பறித்தவர் வந்த மோட்டார் சைக்கிளை மடக்கி விசாரணை செய்தனர். அதற்குள் அங்கு வந்த மணிகண்டன் செல்போனை பறித்த வாலிபர் குறித்து போலீசாரிடம் தெரிவித்ததையடுத்து, திருமங்கலம் போலீசாரிடம் வாலிபரை ஒப்படைத்தனர்.

விசாரணையில் பிடிபட்ட வாலிபர் திருவள்ளூரை சேர்ந்த மகேஷ் குமார் (19), என்பதும், இவர் அப்பகுதியில் ஓட்டலுக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை திருடிக்கொண்டு வரும்போது, வழியில் மணிகண்டன் செல்போனை பறித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து மகேஷ்குமாரிடம் இருந்து மோட்டார் சைக்கிள், செல்போன், கத்தி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்