திருவண்ணாமலையில், 2 வீடுகளில் பூட்டை உடைத்து 21½ பவுன் நகை, ரூ.70 ஆயிரம் திருட்டு

திருவண்ணாமலையில் 2 வீடுகளில் பூட்டை உடைத்து 21½ பவுன் நகைகள், ரூ.70 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2019-05-14 22:15 GMT
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை வேங்கிக்கால் இடுக்கு பிள்ளையார் கோவில் 3-வது தெருவை சேர்ந்தவர் கடல் அழகன் (வயது 27), பெங்களூருவில் பழ வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது குடும்பத்துடன் கடந்த 12-ந் தேதி ஆடையூரில் உள்ள மாமியார் வீட்டுக்கு சென்றார்.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டுக்கு திரும்பினார். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 18½ பவுன் நகைகள் மற்றும் ரூ.70 ஆயிரம் திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் சம்பவஇடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

இதேபோல திருவண்ணாமலை மண்ணம்மாள் நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நரசிம்மன் (வயது 32). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் கச்சிராப்பட்டுக்கு சென்று விட்டார். நேற்று அவர் வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. மேலும் பீரோவில் இருந்த 3 பவுன் நகைகள் திருட்டு போய் இருந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்