காதலியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபர் கைது
காதலியை கர்ப்பமாக்கி விட்டு திருமணத்துக்கு மறுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
வசாய்,
தானே மாவட்டம் பயந்தர் பகுதியை சேர்ந்தவர் ஜாகீர் முகமது கான் (வயது20). இவருக்கு கடந்த ஆண்டு 19 வயது இளம்பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நிலையில், திருமணம் செய்வதாக கூறி அவர் இளம்பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து உள்ளார்.
இதன் காரணமாக அந்த இளம்பெண் கர்ப்பமானார். இதுபற்றி அவர் ஜாகீர் முகமது கானிடம் கூறி திருமணத்துக்கு வற்புறுத்தினார்.
ஆனால் அவர் இளம்பெண்ணை திருமணம் செய்து கொள்ள மறுத்து விட்டார். மேலும் வயிற்றில் வளரும் கருவை கலைத்து விடும்படி கூறியிருக்கிறார். இதை கேட்டு இளம்பெண் கடும் அதிர்ச்சி அடைந்தார். தன்னை கற்பழித்து ஏமாற்றிய ஜாகீர் முகமது கான் மீது போலீசில் கற்பழிப்பு புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாகீர் முகமது கானை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.