பொள்ளாச்சி பாலியல் விவகாரம், சிறையில் இருக்கும் மணிவண்ணனை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை

பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் சிறையில் இருக்கும் மணிவண்ணனை சி.பி.ஐ. கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.;

Update: 2019-05-13 22:30 GMT
பொள்ளாச்சி,

பொள்ளாச்சியில் இளம்பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த விவகாரத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை பொள்ளாச்சி கிழக்கு போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 24-ந் தேதி கைது செய்தனர்.

அதே மாதம் 26-ந் தேதி புகார் கொடுத்த 19 வயது கல்லூரி மாணவியின் அண்ணன் பொள்ளாச்சி அருகே சென்றபோது, சின்னாம்பாளையத்தை சேர்ந்த செந்தில் (வயது 33), மற்றொரு வசந்தகுமார் (26), மணி என்கிற மணிவண்ணன் (25), பார் நாகராஜ் (28), பாபு (26) ஆகிய 5 பேரும் சேர்ந்து அவரை வழிமறித்து தாக்கியதுடன் வழக்கை வாபஸ்பெறக்கோரி கொலை மிரட்டல் விடுத்தனர். இது தொடர்பாகவும் போலீசார் அடிதடி வழக்குப்பதிவு செய்து மணிவண்ணனை தவிர மற்ற 4 பேரையும் கைது செய்தனர்.

இதற்கிடையே இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அடிதடி வழக்கில் தலைமறைவாக இருந்த மணிவண்ணன் மார்ச் மாதம் கோவை கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தபோது, அவருக்கு பாலியல் பலாத்கார சம்பவத்தில் தொடர்பு இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதையடுத்து அவரை 5-வது நபராக சேர்த்து கைது செய்தனர். தற்போது அவர்கள் கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அவர்கள் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையை மேற்கொள்ள வில்லை. தொடக்கத்தில் இருந்தே விசாரணையை மேற்கொண்டனர். பாலியல் பலாத்கார வழக்கை சி.பி.ஐ.யை சேர்ந்த கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கலைமணி விசாரணை நடத்தியதுடன் இந்த வழக்கில் தொடர்புடைய திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 4 பேரை மட்டும் கைது செய்தனர்.

இதில் தீவிர விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. போலீசார் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய மணிவண்ணனை கைது செய்து உள்ளது. அத்துடன் சிறையில் இருக்கும் அவருக்கு கைது செய்ததற்கான நகல் நேற்று வழங்கப்பட்டது. மேலும் சி.பி.ஐ.யை சேர்ந்த போலீசார் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோரிடம் தினமும் 2 மணி நேரம் விசாரணை நடத்த கோர்ட்டில் சிறப்பு அனுமதி பெற்றனர். அதன்படி நேற்று முதல் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விசாரணை முடிந்த பின்னர் அவர்கள் 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தவும் சி.பி.ஐ. முடிவு செய்து உள்ளது. இதற்காக விரைவில் கோர்ட்டில் மனுவும் தாக்கல் செய்ய உள்ளனர்.

மேலும் செய்திகள்