மறுவாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடியை கைப்பற்ற அ.தி.மு.க. முயற்சி - கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கக்கோரி தி.மு.க. வேட்பாளர்கள் மனு

மறுவாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடியை கைப்பற்ற அ.தி.மு.க. முயற்சி செய்யும் வாய்ப்பு உள்ளதால் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று தி.மு.க. வேட்பாளர்கள் மனு அளித்துள்ளனர்.

Update: 2019-05-13 22:30 GMT
தேனி,

தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க. வேட்பாளர் மகாராஜன், பெரியகுளம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் தி.மு.க.வேட்பாளர் சரவணக்குமார் ஆகியோர் வந்தனர். பின்னர் அவர்கள் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரான கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற இடைத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற்றது. பின்பு தேர்தல் ஆணையம் சார்பில் பெரியகுளம் தொகுதியில் வடுகபட்டியிலும், ஆண்டிப்பட்டி தொகுதியில் பாலசமுத்திரத்திலும் மறுவாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டது.

நாங்கள் மறுவாக்குப்பதிவு அவசியம் இல்லை என்று ஏற்கனவே மனு கொடுத்துள்ளோம். இந்நிலையில் மறுவாக்குப்பதிவின்போது ஆளும்கட்சியான அ.தி.மு.க.வினரால் வெளியாட்களை வைத்து வாக்குச்சாவடியை கைப்பற்றும் முயற்சி நடைபெற வாய்ப்பு உள்ளது. மேலும் வாக்கு எண்ணிக்கையின் போதும் அ.தி.மு.க.வினர் கலவரத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக மறு வாக்குப்பதிவு நடைபெறும் இடங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு வழங்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்