கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் பணி
கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கடலோர காவல்படையில் உதவி கமாண்டன்ட் வேலை அறிவிக்கப்பட்டு உள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணியிடங்களில் சேரலாம்.
இதுபற்றிய விவரம் வருமாறு:-
இந்தியன் கோஸ்ட் கார்டு எனப்படும் இந்திய கடலோர காவல்படை மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. ஆயுதப்படையின் ஒரு அங்கமான இது கடற்கரை மற்றும் கடலோர வளங்களை பாதுகாத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறது. தற்போது இந்த படைப்பிரிவில் ‘குரூப்-ஏ’ பிரிவின் கீழ் வரும் கெசட்டடு அதிகாரி பணியான உதவி கமாண்டன்ட் வேலைக்கு தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு உள்ளது.
ஜெனரல் டியூட்டி, கமர்சியல் பைலட் லைசென்ஸ், டெக்னிக்கல் என்ஜினீயரிங் போன்ற பிரிவில் பணியிடங்கள் உள்ளன. ‘அசிஸ்டன்ட் கமாண்டன்ட் 1-2020’ என்ற பயிற்சி சேர்க்கையின் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. பட்டப்படிப்பு படித்த, இந்திய குடியுரிமை பெற்ற திருமணமாகாத இளைஞர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
ஜெனரல் டியூட்டி மற்றும் டெக்னிக்கல் பிரிவு விண்ணப்பதாரர்கள் 1-7-1995 மற்றும் 30-6-1999 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். கமர்சியல் பைலட் பிரிவுக்கு விண்ணப்பிப்பவர்கள் 1-7-1995 மற்றும் 30-6-2001 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
பட்டப்படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெனரல் டியூட்டி (ஆண்-பெண்) மற்றும் ஜெனரல் டியூட்டி பைலட் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். இவர்கள் பிளஸ்-2 படிப்பில் கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்கள் அடங்கிய பிரிவை தேர்வு செய்து படித்திருக்க வேண்டும். படிப்பை இடைவெளியின்றி (10+2+3 முறையில்) படித்து முடித்தவராக இருக்க வேண்டும்.
12-ம் வகுப்பில் இயற்பியல் கணித பாடத்தில் 60 சதவீத மதிப்பெண் தேர்ச்சியுடன், கமர்சியல் பைலட் லைசென்சு பெற்றவர்கள் பைலட் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
விண்ணப்பதாரர்களுக்கு நுண்ணறிவுத் திறன் தேர்வுகள், உளவியல் தேர்வு, நேர்காணல், மருத்துவ தேர்வு ஆகியவை நடத்தி தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணைய தளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். 24-5-2019-ந் தேதி இதற்கான விண்ணப்பப்பதிவு தொடங்கி உள்ளது. 4-6-2019-ந் தேதி வரை விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். கூடுதல் விவரங்களை http://joinindiancoastguard.gov.in/ என்ற இணைய தளத்தில் பார்க்கலாம்.