தாதர் ரெயில் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நடைமேம்பாலம் நாளை முதல் மூடல் புதிதாக கட்டப்படுகிறது

தாதர் ரெயில் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நடைமேம்பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்த நடைமேம்பாலம் நாளை முதல் மூடப்படுகிறது.

Update: 2019-05-12 23:15 GMT
மும்பை, 

தாதர் ரெயில் நிலையத்தில் உள்ள பழுதடைந்த நடைமேம்பாலத்தை இடித்துவிட்டு புதிதாக கட்ட மேற்கு ரெயில்வே முடிவு செய்துள்ளது. இதன் காரணமாக அந்த நடைமேம்பாலம் நாளை முதல் மூடப்படுகிறது.

நடைமேம்பால விபத்து

தென்மும்பையில் சி.எஸ்.எம்.டி. ரெயில் நிலையத்தையும், பி.டி.லேன் பகுதியையும் இணைக்கும் வகையில் அங்குள்ள சாலையின் குறுக்கே இருந்த ஹிமாலயா நடைமேம்பாலம் கடந்த மார்ச் மாதம் 14-ந்தேதி இரவு இடிந்து விழுந்தது.

இந்த கோர விபத்தில் 7 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து, பாலங்கள் மற்றும் நடைமேம்பாலங்களின் உறுதி தன்மை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

தாதரில்...

இந்தநிலையில், ரெயில் நிலைய நடைமேம்பாலங்களை ஆய்வு செய்த மும்பை ஐ.ஐ.டி. தணிக்கை குழு மேற்கு ரெயில்வே தாதர் ரெயில் நிலையத்தின் தெற்கு பகுதியில் உள்ள 1 முதல் 5-ம் எண் வரையிலான பிளாட்பாரங்களை இணைக்கும் வகையில் உள்ள நடைமேம்பாலம் பழுதடைந்து இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நடைமேம்பாலத்தின் வழியாக அதிகளவில் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

அந்த நடைமேம்பாலத்தை இடித்து தள்ள மும்பை ஐ.ஐ.டி. தணிக்கை குழு பரிந்துரை செய்து உள்ளது. இதையடுத்து அந்த நடைமேம்பாலத்தை இடித்துவிட்டு அங்கு புதிய நடைமேம்பாலம் கட்ட மேற்கு ரெயில்வே முடிவு செய்து உள்ளது.

நாளை முதல் மூடல்

1993-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த நடைமேம்பாலத்தின் இரும்பு சட்டங்கள் மோசமான அளவுக்கு துருப்பிடித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த நடைமேம்பாலம் நாளை(செவ்வாய்க்கிழமை) முதல் மூடப்படுகிறது. எனவே புதிய நடைமேம்பாலம் கட்டி முடிக்கப்படும் வரை பயணிகள் ரெயில் நிலையத்தில் உள்ள மற்ற நடைமேம்பாலங்களை பயன்படுத்தி கொள்ளவேண்டும் என மேற்கு ரெயில்வே தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்