திருப்பூர்– ஊத்துக்குளி ரோட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள மேம்பாலப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2019-05-12 22:30 GMT

திருப்பூர்,

திருப்பூர் மாநகருக்குட்பட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் முக்கிய பகுதிகளில் மேம்பாலங்கள் கட்ட திட்டமிடப்பட்டது. இதன்படி பழைய கலெக்டர் அலுவலகம் முன்புறத்தில் இருந்து பெருமாள் கோவில் அருகே வரை மேம்பாலம் கட்டப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநகரின் பெரும்பகுதியை பிரிக்கும் விதமாக திருப்பூர்–ஊத்துக்குளி ரோடு உள்ளது. இதனால் நொய்யல் ஆற்றையொட்டி உள்ள பகுதியில் இருந்து ஊத்துக்குளி ரோடு, ரெயில்வே தண்டவாள பகுதிகளை தாண்டி பாப்பநாயக்கன்பாளையம் வரை செல்லும் வகையில் மேம்பாலம் ஒன்றை கட்ட பொதுப்பணித்துறை திட்டமிட்டது.

இதன்படி கடந்த பல வருடங்களுக்கு முன்பு இந்த மேம்பால பணிகள் தொடங்கப்பட்டது. விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த இந்த பணிகள், பாப்பாநாயக்கன்பாளையம் பகுதியில் சென்று திடீரென நிறுத்தப்பட்டது. ஒருசில மீட்டர் அளவிலேயே மீதமுள்ள பணிகள் இருக்கும் நிலையில், அந்த பணிகளை முடிக்காமல், பல வருடங்களாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதை உடனடியாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பாலத்தை திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:–

திருப்பூர் மாநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், லட்சக்கணக்கான தொழிலாளர்களும் வேலைசெய்து வருகின்றனர். இதனால் மாநகர பகுதிகள் எப்போதும் பரபரப்பாகவே காணப்படும். போக்குவரத்து நெரிசலும் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த திருப்பூர்–ஊத்துக்குளி ரோட்டின் குறுக்கே மேம்பாலம் கட்டப்பட்டு வந்தது. விரைவில் பயன்பாட்டிற்கு வந்து விட்டால், போக்குவரத்து நெரிசல் குறையும் என்று எண்ணி கொண்டு இருந்தோம். ஆனால் திடீரென இந்த பாலப்பணிகளை கிடப்பில் போட்டுவிட்டனர். பாலம் முடிவடையும் இடம், ஏற்கனவே பாறைக்குழியாக இருந்த பகுதி.

தற்போது இந்த பாறைக்குழியில் குப்பைகள் கொட்டி நிரப்பப்பட்டுள்ளது. இதனால் இதன் மீது பாலத்தை கட்ட இயலாது என்பதாலும், நிலம் கையகப்படுத்தலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாலும், பால பணிகள் அப்படியே கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆண்டுகள் செல்ல செல்ல ஏற்கனவே கட்டப்பட்ட பகுதியின் உறுதி தன்மையும் கேள்விக்குறியாகி வருகிறது. இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ., மாவட்ட நிர்வாகம், பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை விடுத்துள்ளோம். புகார் கொடுக்கும் போது சம்பந்தப்பட்ட இடத்திற்கு வந்து ஆய்வுசெய்கின்றனர். ஆனால் நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. மாநகரின் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதமாக உடனடியாக இந்த பாலப்பணிகளை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மேலும் செய்திகள்