ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தல்

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்டு வலியுறுத்தி உள்ளது.

Update: 2019-05-12 22:15 GMT
சுந்தரக்கோட்டை,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி திருவாரூர் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் மாசிலாமணி, தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கர் ஆகியோர் வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது:–

காவிரி டெல்டா பகுதியில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை அமல்படுத்த, மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பது விவசாயிகளையும், பொதுமக்களையும் பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுப்பதற்கான ஏல அறிவிப்பை மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சில மாதங்களுக்கு முன்பு வெளியிட்டது,

ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுத்தால் காவிரி டெல்டா மாவட்டத்தில் உள்ள விளை நிலங்கள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும், சேவை சங்கங்களும் தொடர்ந்து போராடி வருகிறது.

போராட்டம்


காவிரி டெல்டா மாவட்டத்தையும், தமிழக விவசாயிகளையும் பாதுகாக்க ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஜூன் மாதத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் அனைத்து தரப்பு மக்களையும் திரட்டி மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்