மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்குச்சீட்டுகள் வினியோகம் கலெக்டர் தகவல்

மறுவாக்குப்பதிவு நடக்கும் இடங்களில் வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்குச்சீட்டுகள் அச்சடித்து வினியோகம் செய்யப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2019-05-12 22:45 GMT

தேனி,

தமிழகத்தில் கடந்த மாதம் 18–ந்தேதி நடந்த வாக்குப்பதிவின் போது தவறு நடந்ததாக கூறப்பட்ட, 13 வாக்குச்சாவடிகளில் வருகிற 19–ந்தேதி மறுவாக்குப்பதிவு நடக்கிறது.

அதையொட்டி தேனி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியில் உள்ள பாலசமுத்திரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 67, பெரியகுளம் சட்டமன்ற தொகுதியில் உள்ள வடுகப்பட்டியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடி எண் 197 ஆகிய இரு இடங்களிலும் மறுவாக்குப்பதிவு நடக்கிறது. இதற்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுகுறித்து கலெக்டர் பல்லவி பல்தேவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

மறுவாக்குப்பதிவுக்கான முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மறுவாக்குப்பதிவு நடக்கும் 2 வாக்குச்சாவடிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு மீண்டும் வாக்குச்சீட்டு (பூத் ஸ்லிப்) வழங்கப்படும். இதற்காக வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட உள்ளன. வாக்குப்பதிவு நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பு வாக்குச்சீட்டு வினியோகம் செய்யப்படும். அனைத்து வாக்காளர்களுக்கும் முழுமையாக வீடு தேடிச் சென்று வாக்குச்சீட்டுகள் வினியோகிக்கப்படும்.

மறுவாக்குப்பதிவு நடக்கும் பகுதிகளில் தேர்தல் விதிமீறல்கள் தொடர்பான எந்த புகாராக இருந்தாலும் 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம். இதற்காக கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்படும். விதிமீறல் தொடர்பான புகைப்படம், வீடியோக்களை ‘சி–விஜில்’ என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்