ஓய்வூதிய தொகை தராததால் ஆத்திரம்: தாயை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற மகன் கைது
ஓய்வூதிய தொகை தராததால் தாயை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
குமுளி,
குமுளி செங்கரையில் உள்ள ஒரு தனியார் எஸ்டேட்டில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (வயது 47). தையல் தொழிலாளி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவி, குழந்தைகளை பிரிந்து தனது தாயார் மரியசெல்வத்துடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை பூட்டிவிட்டு மரியசெல்வம் கடைக்கு சென்றார்.
பின்னர் சிறிது நேரம் கழித்து வந்து வீட்டின் பூட்டை திறக்க முயன்றார். அப்போது பூட்டில் இருந்து மின்சாரம் பாய்ந்து மரியசெல்வம் தூக்கி வீசப்பட்டார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதற்கிடையே பூட்டுக்குள் மின்சாரம் ஊடுருவி இருப்பதை கண்ட பொதுமக்கள், மின்சாரத்துறையினருக்கும், குமுளி போலீசாருக்கும் தகவல் கொடுத்தனர்.
அதன்பேரில் மின்சாரத்துறையினர் வந்து மின் இணைப்பை துண்டித்து விட்டனர். இதுகுறித்து குமுளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது பூட்டில் மின் இணைப்பு கொடுக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் மரியசெல்வத்தின் மகன் ராஜேந்திரனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் தனது தாயை மின்சாரம் பாய்ச்சி கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதுகுறித்து அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் கூறியதாவது:–
மரியசெல்வம் அரசிடம் இருந்து மாதந்தோறும் ரூ.1,100 ஓய்வூதிய தொகை பெற்று வருகிறார். இந்த தொகையை ராஜேந்திரன் கேட்டுள்ளார். ஆனால் மரியசெல்வம் பணத்தை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன், தனது தாயை கொலை செய்ய முடிவு செய்தார். இதற்காக வீட்டில் உள்ள மின்சார சுவிட்ச் போர்டில் இருந்து கதவின் பூட்டுக்கு மின் இணைப்பு கொடுத்துள்ளார். மரியசெல்வம் பூட்டை தொடும்போது மின்சாரம் பாய்ந்து இறந்து விடும் நிலையில் மின்இணைப்பு கொடுத்துள்ளார்.
இவ்வாறு போலீசார் கூறினர்.
இதையடுத்து ராஜேந்திரனை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.