ஊட்டியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை’ போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
ஊட்டியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற அமைப்பை போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா தொடங்கி வைத்தார்.
ஊட்டி,
மலைப்பிரதேசமான நீலகிரியில் கோடை சீசன் நடைபெற்று வருகிறது. இதையொட்டி தினமும் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வந்து செல்கின்றனர். இதனால் ஊட்டி நகரில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நிலையில் ஊட்டியில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்த ‘நீலகிரி படை‘ என்ற புதிய சமூக பாதுகாப்பு அமைப்பு தொடங்கப்பட்டு உள்ளது. இந்த அமைப்பில் உள்ளவர்கள் வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை ஊட்டியில் தலைகுந்தா, பிங்கர்போஸ்ட், காந்தல், சேரிங்கிராஸ், லவ்டேல், எல்லநள்ளி, பட்பயர் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியிலும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் இருக்க கண்காணிப்பு பணியிலும் ஈடுபட உள்ளனர்.
இந்த அமைப்பின் தொடக்க நிகழ்ச்சி சேரிங்கிராஸ் பகுதியில் நேற்று காலை 11 மணிக்கு நடைபெற்றது. நிகழ்ச்சியில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா கலந்துகொண்டு, அமைப்பை தொடங்கி வைத்தார். மேலும் அமைப்பில் உள்ள 60 பேருக்கு ‘நீலகிரி படை‘ என்று குறிப்பிடப்பட்ட மஞ்சள் நிற டீ-சர்ட் மற்றும் நீல நிற தொப்பியை வழங்கினார்.
பின்னர் அமைப்பில் உள்ளவர்களுக்கு அவர் அறிவுரை வழங்கி பேசியதாவது:-
ஊட்டியில் மலர் கண்காட்சி நடைபெறும் நாட்களான வருகிற 17-ந் தேதி முதல் 21-ந் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் ஊட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் பொதுமக்களோடு இணைந்து, அதனை சீர் செய்ய வேண்டும்.
மேலும் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கும், துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும், போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கும் தகவல் கொடுக்க வேண்டும். இந்த அமைப்பில் உள்ளவர்கள் தன்னிச்சையாக செயல்படக்கூடாது. சிறப்பாக செயல்படுபவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர்கள் சதாசிவம், முருகேசன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.