வடக்கன்குளத்தில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு மளிகைக்கடைக்காரர் கைது

வடக்கன்குளத்தில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-05-12 21:30 GMT
வடக்கன்குளம்,

வடக்கன்குளத்தில் டிரைவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மளிகைக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.

டிரைவர்

வடக்கன்குளம் தனலட்சுமி நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் செந்தில்குமார் (வயது 30). இவர் அப்பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். அதே ஊர் ராஜா தெருவை சேர்ந்தவர் தனபால் மகன் ரத்தினம் (34). டிரைவர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் உண்டு. மேலும் இவர் செந்தில்குமாருக்கு ரூ.1,500 கடன் பாக்கி வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

நேற்று மாலை ரத்தினம் மது குடிப்பதற்காக தண்ணீர் பாக்கெட்டும், டம்ளரும் கடனுக்கு கேட்டுள்ளார். அப்போது செந்தில்குமார், ஏற்கனவே வாங்கிய கடனை திருப்பி கொடுத்தால் தான் மீண்டும் பொருள் தருவதாக கூறியுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரத்தினம் அங்கிருந்து வீட்டுக்கு சென்றுவிட்டார்.

அரிவாள் வெட்டு

பின்னர் சிறிது நேரம் கழித்து ரத்தினம் குடிபோதையில் செந்தில்குமார் கடைக்கு வந்தார். திடீரென தான் மறைத்து வைத்த அரிவாளை எடுத்து செந்தில்குமாரை வெட்ட முயன்றார். ஆனால் சுதாரித்துக் கொண்ட செந்தில்குமார் அவரிடம் இருந்து அரிவாளை பிடுங்கி, ரத்தினத்தை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இச்சம்பவத்தை தொடர்ந்து செந்தில்குமார் பணகுடி போலீசில் சென்று சரண் அடைந்தார். அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்