நாமக்கல் கும்பலிடம் குழந்தைகளை விற்ற பெற்றோரை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்

நாமக்கல் குழந்தைகள் விற்பனை சம்பவத்தில் பிடிபட்ட கும்பலிடம் குழந்தைகளை விற்ற பெற்றோரை கண்டறிய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Update: 2019-05-12 22:15 GMT
நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன் உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர்.

இவர்களுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள குழந்தை விற்பனை புரோக்கர்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்ததை தொடர்ந்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றம் செய்யப்பட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்கில் முக்கிய குற்றவாளிவான அமுதவள்ளி, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர் அருள்சாமி உள்ளிட்ட 5 பேரை காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், இந்த கும்பல் 30 குழந்தைகளை விற்பனை செய்து இருப்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தியை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே இந்த வழக்கில் 30 குழந்தைகளையும் விற்பனை செய்த பெற்றோர் மற்றும் அவற்றை வாங்கிய நபர்களை அடையாளம் கண்டு, அவர்களிடம் இருந்து வாக்குமூலம் பெற சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். அதற்காக கொல்லிமலை போன்ற பகுதிகளில் வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்களுடன் இணைந்து குழந்தைகளை விற்பனை செய்த பெற்றோரை தேடும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

குழந்தைகளை விற்ற பெற்றோரிடம் எந்த காரணத்துக்காக குழந்தைகள் விற்கப்பட்டது, புரோக்கர்களால் மிரட்டப்பட்டு அல்லது நிர்ப்பந்தம் செய்யப்பட்டு குழந்தைகளை விற்றார்களா?, அதேபோல் குழந்தைகளை பணம் கொடுத்து வாங்கியவர்களிடம் உண்மையில் குழந்தை இல்லாத காரணத்தால் தான் விலை கொடுத்து வாங்கப்பட்டதா? என்பதை அறியும் பொருட்டு இந்த தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

மேலும் புரோக்கர்கள் மூலம் வாங்கப்பட்ட குழந்தைகள் அவற்றை வளர்த்து வரும் பெற்றோரிடம் தான் உள்ளதா? வாங்கப்பட்ட குழந்தைகளை அவர்கள் சரியான முறையில் வளர்த்து வருகிறார்களா? என்பதை அறியவும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்