மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் கலெக்டர் சந்தீப்நந்தூரி தகவல்

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

Update: 2019-05-12 21:30 GMT
தூத்துக்குடி, 

மக்காச்சோளத்தை தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும் என்று கலெக்டர் சந்தீப்நந்தூரி தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-

ஊடுபயிர்

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள், மக்காச்சோளத்தை தாக்கும் அமெரிக்கன் படைப்புழுவை வராமல் தடுக்கவும், வந்தபின் கட்டுப்படுத்தி பயிரை காக்கவும், ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். அதன்படி மே, ஜூன் மாதங்களில் கோடை உழவு செய்வதன் மூலம் மண்ணில் உள்ள கூட்டுப்புழுக்களை வெளிப்படுத்தி அழிக்கலாம். அனைத்து விவசாயிகளும் பருவத்தில் ஒரே சமயத்தில் விதைப்பு செய்யவேண்டும். பல்வேறு நிலைகளில் விதைப்பு செய்தால் வளர்ச்சி நிலையில் உள்ள மக்காச்சோள பயிர்களில் அமெரிக்கன் படைப்புழு அதிக அளவில் தாக்கும். அடுத்தடுத்து விதைக்கப்படும் பயிர்களில் தாவி தொடர் சேதத்தை ஏற்படுத்தும்.

1 கிலோ விதைக்கு பேவேரியா பேசியானா 10 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்வதன் மூலம் பூச்சி தாக்குதலை குறைக்கலாம். மக்காச்சோளம் விதைக்கும்போது அதனுடன் வயல் ஓரங்களில் தட்டைப்பயறு, ஆமணக்கு, சூரியகாந்தி, சாமந்திப்பூ ஆகியவற்றை விதைப்பதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். எனவே, அனைத்து விவசாயிகளும் கண்டிப்பாக ஊடுபயிர் செய்ய வேண்டும்.

பூச்சிக்கொல்லிகள்

விவசாயிகள் பயிர் விதைத்த ஒரு வாரம் முதல் 3 அல்லது 4 தினங்கள் இடைவெளியில் வயல் முழுவதும் நடந்து, கண்காணித்து இலையின் மேற்புறம் அல்லது பின்புறம் காணப்படும் முட்டை குவியல்கள் மற்றும் இளம்புழு கூட்டங்களை சேகரித்து அழிக்க வேண்டும். எக்டருக்கு 12 எண்கள் வீதம் இனக்கவர்ச்சி பொறிகள் வைத்து, ஆண் அந்துப்பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். அதனால் இனப்பெருக்கம் தடுக்கப்பட்டு, புழு தாக்குதல் வெகுவாக குறையும். மெட்டாரைசியம் அனிசோபிலே எக்டருக்கு 4 கிலோ என்ற அளவில் விதைத்த 20 நாட்களுக்கு பிறகு தெளிக்க வேண்டும்.

பூஞ்சாணங்கள் தாக்கிய புழுக்களை சேகரித்து அவற்றை மீண்டும் அரைத்து பயிருக்கு அடிப்பதன் மூலம் புழுக்களை கட்டுப்படுத்தலாம். சாம்பல், மணல் ஆகியவற்றை குருத்தில் இடுவதன் மூலம் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம். கடைசி வழிமுறையாக பரிந்துரைக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் குருத்தில் தெளிக்க வேண்டும். தாக்குதல் அதிகமாக இருப்பின் ஒரு லிட்டர் தண்ணீருக்கு ஸ்பின்னோசிட் 12 எஸ்.பி. 0.5 மில்லி லிட்டர், எமாக்டின் பென்சோயேட் 5எஸ்.ஜி. 0.4 கிராம், தயோடிகார்ப் 75 டபிள்யு.பி.2கி ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றினை தெளித்து கட்டுப்படுத்தலாம். இந்த முறைகளின் மூலம் மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகள் மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறைகளை கடைபிடித்து, அமெரிக்கன் படைப்புழுவை கட்டுப்படுத்தலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்