காவேரிப்பட்டணம் அருகே வாகனம் மோதி தச்சு தொழிலாளி பலி

காவேரிப்பட்டணம் அருகே மோட்டார் சைக்கிள் மீது வாகனம் மோதி தச்சு தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2019-05-12 22:30 GMT
காவேரிப்பட்டணம், 

காவேரிப்பட்டணம் அருகே உள்ள தேவீரஹள்ளி பகுதியைச் சேர்ந்தவர் அண்ணாமலை மகன் மூர்த்தி(வயது 44). தச்சு தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் செல்வம் என்பவரின் மோட்டார்சைக்கிளில் கிருஷ்ணகிரியில் இருந்து தர்மபுரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஆத்தோரத்தான் கொட்டாய் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவர்கள் பின்னால் வந்த வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் செல்வம், மூர்த்தி ஆகிய 2 பேரும் பலத்த காயமடைந்தனர். அப்போது அந்த வழியாக சென்றவர்கள் மூர்த்தி மற்றும் செல்வம் ஆகிய 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.

ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே மூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார். செல்வம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து காவேரிபட்டணம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று மூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்ற வாகனம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்