“மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார்” ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்தில் எடப்பாடி பழனிசாமி கடும் தாக்கு
“மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார்“ என்று ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
தூத்துக்குடி,
“மு.க.ஸ்டாலின் ஓட்டுகளை பெற அரசியல் நாடகம் ஆடுகிறார்“ என்று ஓட்டப்பிடாரம் தொகுதி பிரசாரத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக தாக்கி பேசினார்.
எடப்பாடி பழனிசாமி பிரசாரம்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வது கட்ட பிரசாரம் செய்தார். இதற்காக மதுரையில் இருந்து காரில் வந்த முதல்-அமைச்சருக்கு தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, மணிகண்டன், விஜயபாஸ்கர், டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் எம்.எல்.ஏ., நெல்லை-தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவர் என்.சின்னதுரை மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அங்கு திரண்டு இருந்த மக்களிடையே வேட்பாளர் மோகனை ஆதரித்து பிரசாரம் செய்தார். பின்னர் வல்லநாட்டுக்கு வந்த அவர் அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது:-
சூழ்ச்சி
சிலரது சூழ்ச்சியால் இந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். அனைத்து அன்னையர்களுக்கும், அன்னையர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுக்காக உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி.மு.க., ஏழை, எளிய, ஒடுக்கப்பட்ட, பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்காக எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்ட இயக்கம் அ.தி. மு.க., எம்.ஜி.ஆர். உருவாக்கிய இயக்கத்தை கட்டிக்காத்தவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. அவர் ஏராளமான திட்டங்களை மக்களுக்காக தந்தார். நாட்டு மக்களுக்காக வாழ்ந்து மறைந்த தலைவி ஜெயலலிதா.
ஆனால் சிலர் வேண்டுமென்றே ஆட்சியை கவிழ்க்க வேண்டும், கட்சியை உடைக்க வேண்டும் என்று துடிக்கின்றனர். டி.டி.வி.தினகரனுக்கு அ.தி.மு.க.தான் விலாசம் கொடுத்தது. இரட்டை இலை சின்னம்தான் அவருக்கு தகுதியை பெற்றுக் கொடுத்தது. அதே இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் என்று கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த கட்சியை உடைக்க வேண்டும் என்று நினைப்பவர் டி.டி.வி.தினகரன். அவர் தி.மு.க.வுடன் ரகசிய உடன்படிக்கை வைத்துக்கொண்டு அ.தி.மு.க. வேட்பாளர்கள் வெற்றி பெறுவதை தடுக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். தி.மு.க.வுடன் ரகசிய உடன்படிக்கை வைத்து அ.தி.மு.க.வுக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். நெருக்கடியில் இருந்து நீங்கள் காப்பாற்ற வேண்டும்.
விசுவாசம்
இது உங்கள் கட்சி, மக்களுடைய கட்சி. நான் தொண்டனாக இருந்துதான் பேசிக்கொண்டு இருக்கிறேன். நான் விவசாய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவன். நான் உங்கள் பகுதியில் இருந்து தலைவரின் பேச்சு கேட்டு படிப்படியாக உயர்ந்து இங்கு வந்து உள்ளேன். கட்சிக்கு விசுவாசமாக இருந்து உழைத்தால்தான் இங்கு வர முடியும். நீங்கள் போடும் கட்டளையை நிறைவேற்றும் இடத்தில் நான் இருக்கிறேன்.
மு.க.ஸ்டாலின் தலைவர் என்ற கர்வம் பிடித்து பேசிக்கொண்டு இருக்கிறார். டி.டி.வி.தினகரன் எப்படியாவது கட்சியை உடைத்து, ஆட்சியை கவிழ்த்து ஆதாயம் தேட வேண்டும் என்று துடிக்கிறார். எம்.ஜி.ஆர். இரவு பகல் பாராமல் உழைத்து உருவாக்கிய கட்சி அ.தி.மு.க., ஜெயலலிதா உடல்நலத்தை கூட பாராமல் நாட்டு மக்களுக்காக உழைத்தவர். அந்த இருபெரும் தலைவர்களின் எண்ணத்தை நிறைவேற்ற நாங்கள் உங்களோடு பயணித்து வருகிறோம்.
ராஜினாமா
நான் விவசாய குடும்பத்தில் பிறந்தவன். இங்கே இருப்பவர்கள் எப்படி விவசாய பணியை மேற்கொள்கிறீர்களோ அதுபோன்ற உழைக்கும் வர்க்கத்தில் இருந்து வந்தவன். உங்கள் பிரச்சினைகளை நன்கு உணர்ந்தவன். மதுரையில் மு.க.ஸ்டாலின் ஒரு கூட்டத்தில் பேசும்போது, நான் சிவப்பாக இருக்கிறேன். கவர்ச்சியாக இருக்கிறேன். தற்போது 4 நாட்கள் தேர்தல் பிரசாரம் செய்ததால் கருப்பாகி விட்டதாக மக்களிடம் பேசுகிறார். இப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் நாட்டு மக்களுக்கு என்ன செய்வார்கள்? இங்கு இருக்கும் மக்கள் மழையை பொருட்படுத்தாமல், வெயிலை பொருட்படுத்தாமல், இரவு பகல் பாராமல் உழைத்தால்தான் வீட்டில் அடுப்பு எரியும். அப்படிப்பட்ட மக்களை சிந்தித்து பார்த்தாரா?
4 நாட்கள் வெயிலில் சென்றாலே கொடைக்கானல் சென்று உல்லாசமாக இருக்கிறார்கள். 26 நாட்கள் தொடர்ந்து காலை முதல் மாலை வரை அனைத்து பகுதியிலும் சுற்றுப்பயணம் செய்தேன். உச்சி வெயிலையும் பொருட்படுத்தாமல் மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தேன். பொதுமக்களும் உச்சி வெயிலை பொருட்படுத்தாமல் அந்த பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சொகுசு வாழ்க்கை வாழ்ந்தவர் மு.க.ஸ்டாலின். ஏ.சி.யிலேயே படுத்து இருந்தவர். அவரால் 4 நாட்கள் வெயிலை தாங்க முடியவில்லை. இவரை 40 நாள் வெயிலில் போட்டால் பதவியை ராஜினாமா செய்து விட்டு சென்று விடுவார். அப்படிப்பட்ட தலைவர்கள் எல்லாம் இங்குள்ள மக்களின் கஷ்டங்களை தெரியாதவர்கள். நாங்கள் உங்களோடு இருந்து பழகியவர்கள். நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்து, கிராம மக்களோடு இணைந்து வாழ்க்கை நடத்தியவன். கிராமத்தில் உள்ள கஷ்டங்கள் என்ன? அவர்களின் இன்னல்கள் என்ன? அதனை களையும் அனுபவத்தை கண்டவன். அந்த அனுபவத்தின் வாயிலாக அரசு மக்களுக்கு தேவையான அத்தனை திட்டங்களையும் நிறைவேற்றியே தீருவோம்.
அழகன்
மு.க.ஸ்டாலின் செல்லும் இடங்களில் எல்லாம் பேண்ட், டி-சர்ட் போட்டுக்கொண்டு செல்கிறார். எம்.ஜி.ஆர். கூட இதுபோன்று சென்றது கிடையாது. அவர் தன்னை பற்றி பேசியதே கிடையாது. மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றே சிந்தித்தார்.
மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் கட்சி அ.தி.மு.க., மக்கள் எண்ணங்களை நிறைவேற்றும் இயக்கம் அ.தி.மு.க., ஸ்டாலின் கேபிள் டி.வி. கட்டணத்தை குறைப்போம் என்கிறார். அவர்கள் குடும்பத்திடம் உள்ள டி.வி. சேனல்களின் கட்டணத்தை குறைக்கட்டும். மு.க.ஸ்டாலின் குடும்பமும், தயாநிதி மாறன் குடும்பமும் மக்களை ஏமாற்றி வருகின்றனர்.
அரசியல் நாடகம்
அ.தி.மு.க. ஆட்சியில் உள்ளது. நாங்கள் தான் திட்டங்களை செயல்படுத்த முடியும். ஆனால் தி.மு.க. தலைவர் அனைத்தையும் நிறைவேற்றுவது போன்று பச்சைப்பொய் பேசுகிறார். அவர் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார். அதனை எப்படி நடைமுறைப்படுத்த முடியும். இது இடைத்தேர்தல். ஆட்சியில் இருந்தால்தானே நிறைவேற்ற முடியும். ஓட்டுக்களை பெறுவதற்காக அரசியல் நாடகம் ஆடும் தலைவர் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்.
கேபிள் டி.வி. கட்டணத்தை குறைக்க மத்திய அரசிடம் பேசி, தற்போது உள்ள கட்டணமான ரூ.100-க்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். வல்லநாடு-கலியாவூர் சாலை அகலப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. வல்லநாடு கீழ்பகுதியில் ரூ.7 லட்சம் செலவில் அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு உள்ளது. ஆகையால் அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச்செய்யுங்கள்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, வசவப்பபுரத்தில் பொதுமக்கள் மத்தியில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-
நெல்லை மாவட்டத்தில் அடித்த சூறைக்காற்றில் ஏராளமான வாழைகள் சேதம் அடைந்து உள்ளன. அந்த வாழைகளுக்கு நிவாரணம் கொடுக்க எங்கள் அரசு நடவடிக்கை எடுத்து அதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளது. வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கி உள்ளோம். இந்தியாவிலேயே பயிர் காப்பீட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அதிக நிதி பெற்று தந்து உள்ளோம். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தர நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த பகுதியில் பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து உள்ளோம். வசவப்பபுரம் கிராமத்தில் கருங்குளம் கூட்டு குடிநீர் திட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த பகுதிகளில் உள்ள முத்தாலங்குளம், நாட்டார்குளம், செய்துங்கநல்லூர் குளம், கருங்குளம், பெட்டைகுளம் ஆகிய குளங்கள் தூர்வாரப்பட்டு உள்ளன. 12 குடிநீர் திட்டப்பணிகள் முடிக்கப்பட்டு உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் தச்சை கணேசராஜா, அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முத்துக்கருப்பன் எம்.பி., அமைப்பு செயலாளர் சுதாபரமசிவன், அவைத்தலைவர் பரணிசங்கரலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து அவர் தெய்வச்செயல்புரம், செக்காரக்குடி, சவலாப்பேரி, ஒட்டநத்தம், ஓசநூத்து, குறுக்குச்சாலை ஆகிய பகுதிகளில் பிரசாரம் செய்தார். பின்னர் அங்கிருந்து கார் மூலம் மதுரைக்கு புறப்பட்டு சென்றார்.