கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் அலைமோதிய சுற்றுலா பயணிகள்

கோடை விடுமுறையையொட்டி ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.

Update: 2019-05-12 23:15 GMT

பென்னாகரம், 

சுற்றுலா தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்கின்றனர். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்வது நின்றதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறையத்தொடங்கியது.

இதனிடையே நேற்று ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1,000 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. இந்த நீர்வரத்தை கர்நாடக–தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர். கோடை காலம் தொடங்கி உள்ளதால் நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது.

இந்தநிலையில் கோடை விடுமுறையையொட்டி நேற்று சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு மெயின் அருவி, சினிபால்ஸ் மற்றும் காவிரி ஆற்றில் ஆங்காங்கே குடும்பத்தினர், நண்பர்களுடன் குளித்தனர். அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. பின்னர் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு உடை அணிந்து பரிசல் துறையில் இருந்து கோத்திக்கல், ஐவர்பாணி வழியாக பாறைகளுக்கு இடையே மணல் திட்டு வரை காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

பின்னர் சுற்றுலா பயணிகள் மீன் அருங்காட்சியகம், முதலை பண்ணை, சிறுவர் பூங்கா, தொங்கு பாலம் உள்ளிட்ட பகுதிகளை சுற்றி பார்த்தனர். ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியதால் எங்கு பார்த்தாலும் மக்கள் கூட்டமாகவே காணப்பட்டது. இதனால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. மேலும் மீன் மார்க்கெட் மற்றும் மீன் வறுவல் கடைகளில் விற்பனை படுஜோராக நடைபெற்றது.

கோடை வெயில் கொளுத்தியதால் குளிர்பானங்கள், இளநீர் ஆகியவற்றை சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வாங்கி அருந்தினர். மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையில் கூட்டம் அலைமோதியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. பஸ் நிலையம், அஞ்செட்டி சாலை, தர்மபுரி சாலை, முதலை பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் கார், சுற்றுலா வேன், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மடம் சோதனைச்சாவடியில் சுங்க கட்டணம் வசூலிப்பதால் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

வழக்கத்தை விட நேற்று ஒகேனக்கல்லில் கூட்டம் அதிக அளவில் இருந்ததால் அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க போலீசார், ஊர்க்காவல் படையினர் ஆலாம்பாடி, மணல் திட்டு, மெயின் அருவி, பரிசல்துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர். மேலும் ஒலிப்பெருக்கி மூலம் போலீசார் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கினர். மேலும் யாராவது மதுபாட்டில்கள் விற்பனை செய்கிறார்களா? என போலீசார் கண்காணித்தனர்.

மேலும் செய்திகள்