8 வழிச்சாலை திட்டம் நிறுத்தி வைப்பு: முனியப்பனுக்கு கிடா வெட்டி விவசாயிகள் நேர்த்திக்கடன்

8 வழிச்சாலை திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதையடுத்து அரூர் அருகே கோபிநாதம்பட்டி கூட்ரோட்டில் உள்ள முனியப்பனுக்கு கிடா வெட்டி விவசாயிகள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Update: 2019-05-12 23:00 GMT

அரூர்,

சேலம்–சென்னை இடையே 8 வழிச்சாலை திட்டத்திற்கு தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டன. இதனை எதிர்த்து விவசாயிகள் பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து உயர்நீதி மன்றத்தில் விவசாயிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த திட்டம் கைவிடப்பட வேண்டும் என அரூர் பகுதி மக்கள் கோபிநாதம்பட்டி முனியப்பன் கோவிலில் வேண்டுதலும் வைத்திருந்தனர்.

இந்தநிலையில் 8 வழிச்சாலை திட்டத்திற்கு கையகப்படுத்திய நிலங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இந்த திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை விவசாயிகள் வரவேற்று மகிழ்ச்சி அடைந்தனர். இதனையடுத்து தர்மபுரி மாவட்டம் கோம்பூர், மஞ்சவாடி, இருளப்பட்டி, பாப்பம்பாடி, கொக்கராப்பட்டி, மாலகப்பாடி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த 200–க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேண்டுதலை நிறைவேற்ற கோபிநாதம்பட்டி முனியப்பன் கோவிலில் முனியப்பனுக்கு நேர்த்தி கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்காக நேற்று விவசாயிகள் பொங்கல் வைத்து ஆடு, கோழி பலியிட்டு முனியப்பன் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இது குறித்து அவர்கள் கூறுகையில், 8 வழிச்சாலை திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்திய போது இந்த திட்டத்தை நிறுத்த வேண்டும் என முனியப்பனிடம் முறையிட்டுருந்தோம். கடவுள் எங்களுக்கு கருணை புரிந்துள்ளார். எனவே அவருக்கு நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் நாங்கள் எங்கள் உறவினர்களை அழைத்து ஆடு, கோழி வெட்டியுள்ளோம். இதேபோல் 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட முனியப்பன் எங்களுக்கு துணை நிற்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என கூறினர்.

மேலும் செய்திகள்