சேலத்தில் மின்சாரம் தாக்கி மின்வாரிய ஆய்வாளர் பலி மோட்டாரை சரி செய்த போது பரிதாபம்

சேலத்தில் மோட்டாரை சரி செய்த போது மின்சாரம் தாக்கி, மின்வாரிய ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார்.;

Update: 2019-05-12 22:30 GMT

சேலம், 

சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 42). இவர் உடையாப்பட்டியில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில், ஆய்வாளராக பணியாற்றி வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தார்.

அப்போது தொட்டிக்கு தண்ணீர் ஏற்றுவதற்காக தனது வீட்டில் உள்ள மின்சார மோட்டாரின் சுவிட்சை போட்டு உள்ளார். ஆனால் மின்மோட்டார் இயங்கவில்லை. இதனால் மோட்டார் பழுது அடைந்து இருப்பதை அறிந்தார். இதையொட்டி அவர் மின்சார மோட்டாரின் பழுதை சரி செய்து கொண்டிருந்தார்.

இதில் எதிர்பாராதவிதமாக திடீரென்று அவரை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்கள் வீட்டுக்கு ஓடிச்சென்று பார்த்த போது மின்சாரம் பாய்ந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த அன்னதானப்பட்டி போலீசார் தங்கவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்து போன தங்கவேலுக்கு காயத்ரி என்ற மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

மேலும் செய்திகள்