கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.24 லட்சத்தில் திட்டப்பணிகள் உதவி இயக்குனர் ஆய்வு

கீழ்பென்னாத்தூரில் குடிநீர் பிரச்சினையை தீர்க்க ரூ.24 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை உதவி இயக்குனர் திருஞானம் ஆய்வு செய்தார்.

Update: 2019-05-12 22:45 GMT

கீழ்பென்னாத்தூர், 

கோடை காலம் தொடங்கியதில் இருந்தே திருவண்ணாமலை மாவட்டத்தில் கடுமையாக வெயில் வாட்டி வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதி அடைந்துள்ளனர். இது ஒருபுறம் இருக்க கோடை காலம் என்பதால் மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி போன்ற நீர்நிலைகளில் தண்ணீர் வற்றி வறண்டு காணப்படுகிறது. திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள் மூலம் மக்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது நிலத்தடி நீரும் குறைந்து விட்டது. போதிய மழையும் இல்லாததால் பல்வேறு இடங்களில் குடிநீர் பிரச்சினை தலைவிரித்தாட தொடங்கி விட்டது. மக்கள் வீதியில் இறங்கி குடிநீருக்காக போராடும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கீழ்பென்னாத்தூர் பகுதியில் பேரூராட்சி சார்பிலும் குடிநீர் பிரச்சினையை போக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.24 லட்சத்தில் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேரூராட்சி அதிகாரிகள் கூறியதாவது:–

கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கு 8 மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலமும், 5 திறந்தவெளி கிணறுகள் மூலமும், 98 சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் மூலமும், 68 கைப்பம்புகள் மூலமும் குடிநீர் வழங்கப்படுகிறது.

இதில் 2,3,4,5 ஆகிய வார்டுகளுக்கு 2 நாளைக்கு ஒருமுறையும், கருங்காலிகுப்பம், நெடுங்காம்பூண்டி, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் தினமும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. தற்போது கோடை காலம் என்பதாலும், போதிய அளவு மழை இல்லாததாலும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி மாநில பேரிடர் நிவாரண நிதி, பொது நிதித்திட்டம் போன்ற திட்டங்களின் கீழ் ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, ராஜாதோப்பு பகுதியில் உள்ள திறந்தவெளி கிணறு ஆழப்படுத்தும் பணி நடைபெறுகிறது.

சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.8 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 4 சிறுமின்விசை நீர்த்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இந்த பணிகளை வேலூர் மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் திருஞானம் திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செயல் அலுவலர் கணேசனிடம், பணிகளை விரைந்து முடிக்குமாறும், பொதுமக்களுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கினார். அதைத்தொடர்ந்து அவர் பேரூராட்சி அலுவலகம் சென்று அலுவலக கோப்புகளையும் ஆய்வு செய்தார்.

மேலும் செய்திகள்