வேலூரில், ரூ.5 லட்சம் கேட்டு நிதிநிறுவன அதிபரை கடத்திய வழக்கில் 3 பேர் கைது

வேலூரில் ரூ.5 லட்சம் கேட்டு நிதிநிறுவன அதிபர் கடத்தப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-12 21:15 GMT

வேலூர், 

வேலூர் வேலப்பாடியை சேர்ந்த வெங்கடேசன் மகன் நந்தகுமார் (வயது 24). இவர், கிரீன் சர்க்கிள் அருகே சர்வீஸ் ரோட்டில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். கடந்த 7–ந் தேதி அலுவலகத்தில் இருந்த நந்தகுமாரை 5 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மற்றும் வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதில், பதிவாகியிருந்த காட்சியின் மூலம் கடத்தல் கும்பலை பிடிக்கவும், நந்தகுமாரை மீட்கவும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.

இதற்கிடையே கடத்தல் கும்பல் நந்தகுமாரின் குடும்பத்தினரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டல் விடுத்தனர். அவர்கள் பேசிய செல்போன் எண்ணை வைத்து போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தினர். போலீசார் தேடுவதை அறிந்ததும், நந்தகுமாரை விஷாரத்தில் விட்டு விட்டு கடத்தல் கும்பல் தப்பி சென்றனர்.

தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று நந்தகுமாரை மீட்டனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வேலூர் தொரப்பாடியை சேர்ந்த ஜெகதீசன் சென்னை எழும்பூர் கோர்ட்டில் சரண் அடைந்தார்.

போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவாகிருந்த காட்சியின் மூலம் வேலூர் தொரப்பாடி கே.கே.நகரை சேர்ந்த ராஜேஷ்குமார் (25), ஆர்.என்.பாளையத்தை சேர்ந்த நவாப் (26), வசந்தபுரத்தை சேர்ந்த பாரத் (26) ஆகிய 3 பேரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் 3 பேர் உள்பட 5 பேரும் பணத்துக்காக நந்தகுமாரை கடத்தியதை ஒப்புக்கொண்டனர்.

இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய வேலூர் சங்கரன்பாளையத்தை சேர்ந்த சங்கரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்