வறட்சி பாதித்த மாவட்டங்களில் ‘வேலை உறுதி திட்டத்தை விரைந்து செயல்படுத்துங்கள்’ மாவட்ட கலெக்டர்களுக்கு, பட்னாவிஸ் உத்தரவு

வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஊரக வேலை உறுதி திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

Update: 2019-05-11 23:00 GMT
மும்பை, 

வறட்சி பாதித்த மாவட்டங்களில் ஊரக வேலை உறுதி திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு மாவட்ட கலெக்டர்களுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவிட்டார்.

கடும் வறட்சி

மராட்டியத்தில் 4 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடந்து முடிந்தது. எனினும் மற்ற மாநிலங்களில் தேர்தல் நடந்து வருவதால் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது.

கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்து போனதாலும் கொளுத்தும் வெயிலின் காரணமாகவும், மராட்டியத்தில் கடும் வறட்சி நிலவுகிறது. குறிப்பாக மரத்வாடா பகுதிகளான அவுரங்காபாத், ஜல்னா, உஸ்மனாபாத், பீட், பர்பானி, அகமதுநகர், சோலாப்பூர் மற்றும் நாசிக் மாவட்டங்களில் கடும் வறட்சி நிலவி வருகிறது.

இந்தநிலையில் வறட்சி பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள தேர்தல் நடத்தை விதிமுறையில் இருந்து மராட்டியத்துக்கு விலக்கு அளிக்கும்படி தேர்தல் கமிஷனுக்கு முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கடிதம் எழுதினார். இதற்கு தேர்தல் கமிஷன் அனுமதி அளித்தது.

பட்னாவிஸ் உத்தரவு

இந்தநிலையில், முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லமான வர்ஷாவில் இருந்து மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கிராம பஞ்சாயத்து தலைவர்களுடன் ‘ஆடியோ பிரிட்ஜ்’ தொழில்நுட்பம் மூலம் செல்போனில் உரையாடினார். அப்போது அவர் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

அதன்படி, வறட்சி பாதித்த மாவட்டங்களில் இதுவரை நிலுவையில் வைத்துள்ள அனைத்து திட்டங்களையும் ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் உடனே தொடங்கி விரைந்து முடிக்க வேண்டும். அந்த வேலையை முடித்ததற்கான அறிக்கையை அரசுக்கு தாக்கல் செய்ய வேண்டும் என்று முதல்-மந்திரி பட்னாவிஸ் கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.

மேலும் தங்களது கிராமங்களில் நீர்சேமிப்பு திட்டத்தை முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து தலைவர்களை முதல்-மந்திரி அறிவுறுத்தினார்.

28 புதிய திட்டம்

அதுமட்டும் இன்றி வறட்சி பாதித்த பகுதிகளில் மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் நீர்வள பாதுகாப்பு, நிலவள பாதுகாப்பு, பள்ளி சுற்றுசுவர் கட்டுதல் போன்ற மேலும் 28 புதிய வேலைகளை ஊரக வேலைஉறுதி திட்டத்தில் இணைத்து முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

மேலும் இருப்பில் உள்ள தண்ணீர், குடிநீர் தேவைக்கு மட்டுமே பயன்படுத்த முன்னுரிமை அளிக்கப்படும். சட்டவிரோதமாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதேபோல் தேவையான குடிநீரை வினியோகிக்க நிதி கையிருப்பு உள்ளதாகவும், ஆழ்துளை கிணறுகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்