‘கோச்சடையான்’ பட விவகாரம்: லதா ரஜினிகாந்துக்கு பெங்களூரு போலீஸ் நோட்டீசு விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தரவு
‘கோச்சடையான்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி பெங்களூரு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
பெங்களூரு,
‘கோச்சடையான்’ பட விவகாரம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தை விசாரணைக்கு நேரில் ஆஜராக வேண்டி பெங்களூரு போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.
கோச்சடையான் பட விவகாரம்
நடிகர் ரஜினிகாந்த் நடித்து வெளியான படம் ‘கோச்சடையான்’. இந்த படத்தை முற்றிலுமாக முடித்து கொடுப்பதற்கு தனியார் நிறுவனம் ஒன்று ரூ.10 கோடி கடன் கொடுத்தது. இந்த கடனுக்காக லதா ரஜினிகாந்த் அந்த நிறுவனத்துக்கு சில ஆவணங்கள் மூலம் உத்தரவாதங்களை அளித்துள்ளார். அதாவது, ‘கோச்சடையான்’ பட வினியோக உரிமையை வழங்குவதாக அவர் கடன் கொடுத்த நிறுவனத்திடம் தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், லதா ரஜினிகாந்த் கூறியபடி நடந்து கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
அதாவது பட வினியோக உரிமையை இன்னொரு நிறுவனத்துக்கு லதா ரஜினிகாந்த் வழங்கியதாகவும், போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்ததாகவும் கடன் கொடுத்த நிறுவனம் கூறியது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் பெங்களூரு கூடுதல் முதன்மை மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
லதா ரஜினிகாந்த் மீது வழக்கு
இந்த வழக்கை விசாரித்த கோர்ட்டு லதா ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு அல்சூர் கேட் போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கை ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதுபற்றி விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு லதா ரஜினிகாந்த், ரூ.6.20 கோடியை கடன் கொடுத்த நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
நோட்டீசு
இந்த நிலையில், மோசடி தொடர்பாக லதா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்தும்படி அல்சூர்கேட் போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு கூறியது. அதன்படி கடந்த 2018-ம் ஆண்டு அக்ேடாபர் மாதம் 10-ந் தேதி லதா ரஜினிகாந்திடம் சென்னையில் உள்ள அவருடைய வீட்டில் வைத்து அல்சூர்கேட் போலீசார் விசாரணை நடத்தி தகவல்களை பெற்றனர். தற்போது கூடுதல் தகவல்களை பெற லதா ரஜினிகாந்திடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
இதனால் விசாரணைக்கு ஆஜராகும்படி லதா ரஜினிகாந்துக்கு அல்சூர்கேட் போலீசார் நோட்டீசு அனுப்பினர். அதில் மே மாதம் 6-ந் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் அன்றைய தினம் லதா ரஜினிகாந்த் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கவில்லை.
20-ந் தேதிக்கு பிறகு...
அதே வேளையில், லதா ரஜினிகாந்த் போலீசாரிடம் விசாரணையை தள்ளி வைக்கும்படி கேட்டு கொண்டுள்ளார். அதாவது, தான் பயணத்தில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக முடியவில்லை. இதனால் விசாரணை தேதியை வருகிற 20-ந் தேதிக்கு பிறகு மாற்றும்படி அவர் போலீசாரிடம் கூறியுள்ளார். அதன்படி, வருகிற 20-ந் தேதிக்கு பின்னர் லதா ரஜினிகாந்த் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே இந்த வழக்கு தொடர்பாக போலீசார் அனுப்பிய முதல் நோட்டீசுக்கு லதா ரஜினிகாந்த் விளக்கம் அளிக்கவில்லை என்பதும், தற்போது அனுப்பி இருப்பது 2-வது நோட்டீசு என்பதும் குறிப்பிடத்தக்கது.