துமகூரு அருகே தனியார் சொகுசு பஸ்சில் திடீர் தீ 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
துமகூரு அருகே தனியார் சொகுசு பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
துமகூரு,
துமகூரு அருகே தனியார் சொகுசு பஸ் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இதில் அந்த பஸ்சில் பயணம் செய்த 30 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
பஸ்சில் தீப்பிடித்தது
யாதகிரி மாவட்டம் சுராப்புரா தாலுகா கெம்பாவியில் இருந்து பெங்களூரு நோக்கி நேற்று முன்தினம் இரவு தனியார் சொகுசு பஸ் புறப்பட்டு வந்தது. நேற்று அதிகாலையில் அந்த பஸ் துமகூரு மாவட்டம் கியாத்தசந்திரா அருகே வந்து கொண்டிருந்தது. பஸ்சில் இருந்த பயணிகள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர்.
இந்த நிலையில் திடீரென்று பஸ்சின் ஒருபகுதியில் தீப்பிடித்தது. இதை பஸ்சில் பயணித்த முத்தேபீகால் பகுதியை சேர்ந்த பயணி பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் ‘தீ... தீ...’ எனக்கூறி பயணிகளை எழுப்பினார். இந்த வேளையில் சுதாரித்துக்கொண்ட டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். இதையடுத்து பஸ்சில் இருந்த 30-க்கும் மேற்பட்ட பயணிகள் கீழே இறங்கினர். ஒரு பகுதியில் பிடித்த தீ பஸ் முழுவதுமாக வேகமாக பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அங்கு புகைமண்டலம் ஏற்பட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு துறையினர் மற்றும் கியாத்தசந்திரா போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து பஸ்சில் பிடித்த தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுவதுமாக எரிந்து நாசமானது. பஸ்சில் எப்படி தீப்பிடித்தது என்பது தெரியவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில் கியாத்தசந்திரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கி உள்ளனர். பஸ்சில் தீப்பிடித்தது பற்றி அறிந்ததும் உடனடியாக கீழே இறங்கியதால் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.