பனவடலிசத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த புள்ளிமான் உயிருடன் மீட்பு

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் புள்ளிமான்கள் சரணாலயம் உள்ளது.

Update: 2019-05-11 21:15 GMT
பனவடலிசத்திரம், 

நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் புள்ளிமான்கள் சரணாலயம் உள்ளது. தற்போது கோடை காலத்தை முன்னிட்டு, அங்கு கடும் வறட்சி நிலவுவதால், குடிநீர் மற்றும் உணவைத்தேடி, மான்கள் அருகில் உள்ள விவசாய விளைநிலங்களுக்கும், குடியிருப்பு பகுதிகளுக்கும் செல்கின்றன. 

நேற்று முன்தினம் பனவடலிசத்திரம் அருகே மகேந்திரவாடி கிராமத்தில் சங்கரசுப்பு என்பவரது தோட்டத்தில் சுற்றி திரிந்த புள்ளிமானை தெருநாய்கள் விரட்டின. இதனால் அந்த மான், அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது. சுமார் 35 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் சுமார் 3 அடி ஆழத்துக்கு தண்ணீர் இருந்தது. கிணற்றில் விழுந்ததில் காலில் காயம் அடைந்த புள்ளிமான் தண்ணீரில் தத்தளித்தவாறு கிடந்தது. 

இதுகுறித்து கழுகுமலை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, மானை உயிருடன் மீட்டனர். பின்னர் அதனை புளியங்குடி வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து அந்த மானுக்கு கால்நடை ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்து, புளியங்குடி வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்