நெல்லை அருகே சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன மின்தடையால் பொதுமக்கள் அவதி
நெல்லை அருகே வீசிய சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.;
தாழையூத்து,
நெல்லை அருகே வீசிய சூறைக்காற்றில் மரங்கள் விழுந்து மின்கம்பங்கள் சாய்ந்தன. இதனால் அந்த பகுதியில் ஏற்பட்ட மின்தடையால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.
அக்னி நட்சத்திரம்
நெல்லை மாவட்டத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்தநிலையில் கடந்த 4-ந் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியது. தொடர்ந்து வெயில் கொளுத்தி வருகிறது. 100 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்துவதால் சாலையில் அனல் காற்று வீசுகிறது. நெல்லை மாவட்டத்தில் பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு அணை உள்பட 11 அணைகள் உள்ளன. கோடை வெயிலால் அணைகளில் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் சங்கரன்கோவிலில் 13 மி.மீட்டரும், சிவகிரியில் 7 மி.மீட்டர் மழையும் பதிவானது.
மின்கம்பங்கள் சாய்ந்தன
இந்தநிலையில் நேற்று மாலை ஒரு சில இடங்களில் மழை பெய்தது. தாழையூத்து, சங்கர்நகர், நாரணம்மாள்புரம், கங்கைகொண்டான் உள்ளிட்ட பகுதியில் மாலையில் சூறைக்காற்று வீசியது. பலத்த காற்று வீசியதில் அந்த பகுதியில் சுமார் 40-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்தன. மழை சிறிது நேரம் மட்டும் தான் பெய்தது.
சூறைக்காற்றால் பல மரங்கள் மின் கம்பங்களின் மீது சாய்ந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் மின் கம்பங்களை சரி செய்து வருகின்றனர். இரவு வரை மின்தடை நீடித்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.