நாட்டறம்பள்ளி அருகே ரகசிய பாதாள அறையில் போலி மதுபானம் தயாரிப்பு 3 பேர் கைது

நாட்டறம்பள்ளி அருகே ரகசிய பாதாள அறையில் போலி மதுபானம் தயாரித்து விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-05-11 22:15 GMT
நாட்டறம்பள்ளி, 

வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே போலி மதுபானம் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக வேலூர் கலால் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நாட்டறம்பள்ளி போலீசார் மற்றும் கலால் போலீசார் நேற்று காலை ஏரியூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த மினிவேனை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசாரின் சோதனையில் மினிவேன் மூலம் போலி மதுபானங்களை கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிவேனில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மனோகரன் (வயது 37), கோவிந்தராஜ் (46), சரவணன்(45) என்பது தெரியவந்தது.

மேலும் அவர்கள் சட்டவிரோதமாக போலி மதுபானங்கள் தயாரித்து, அதனை பாட்டில்களில் அடைத்து, வெளி இடங்களுக்கு கடத்துவது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மனோகரன், கோவிந்தராஜ், சரவணன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்

அவர்கள் அளித்த தகவலின் பேரில் போலீசார் ஏரியூர் பகுதிக்கு சென்று அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்த ஒரு அறையை திறந்து பார்த்தனர். அங்கு பேரல் மட்டும் கிடந்தது. சந்தேகமடைந்த போலீசார் அறையில் இருந்த தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மூடியை திறந்தனர். அங்கு தண்ணீர் தொட்டி போல் இருந்த இடத்தில் ஒரு ஆள் மட்டும் நுழையும் அளவுக்கு ரகசிய பாதாள அறை இருந்தது தெரியவந்தது. போலீசார் உள்ளே இறங்கி பார்த்தபோது மதுபாட்டில்கள், காலிபாட்டில்கள், மூடிகள், ஸ்டிக்கர்கள் போன்றவை அந்த அறையில் இருந்தது. அங்கு தான் அவர்கள் போலி மது தயாரித்தது தெரியவந்தது.

இதையடுத்து 720 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்திய மினிவேனையும், மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மேலும் 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்