அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் “தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” கனிமொழி எம்.பி. பேச்சு

“அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

Update: 2019-05-11 22:45 GMT
தூத்துக்குடி, 

“அ.தி.மு.க. ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது” என்று கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

கனிமொழி எம்.பி. பிரசாரம்

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் தெய்வச்செயல்புரம் பகுதியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது;-

இந்த தேர்தல் ஒரு இடைத்தேர்தல் இல்லை. ஆட்சி மாற்றத்தை கொண்டு வரக்கூடிய தேர்தல். அனைவரும் இந்த ஆட்சி எப்போது மாறும் என்று எதிர்பார்த்து இருக்கிறார்கள். அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10-க்கு வாங்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது. சாலை வசதி கிடையாது. படித்த இளைஞர்கள், இளம் பெண்களுக்கு வேலை இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.

பொள்ளாச்சியில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் குற்றம் செய்தவர்களை காப்பாற்ற தான் ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். இது தான் அ.தி.மு.க. ஆட்சியின் உண்மை முகம்.

நீட் தேர்வு

இந்த ஆட்சி மக்களை பற்றி கவலைப்படுவது இல்லை. நீட் தேர்வால் மாணவி அனிதா தற்கொலை செய்தார். தற்போது மீண்டும் எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்த உடன் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று சொல்கிறார்கள். ஆனால் அவர்கள் கூட்டணி வைத்து உள்ள பா.ஜனதாவினர் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்கிறார்கள். தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி நாங்கள் கூட்டணி வைத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தியும் நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்வதாக அறிவித்தார்.

இந்த ஆட்சி தொடர்ந்தால் தமிழகத்தை யாரும் காப்பாற்ற முடியாத நிலை வந்து விடும். இதனை உணர்ந்து இந்த தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டும்.

மர்மம்

ஜெயலலிதா மரணத்தில் ஏதாவது ஒரு உண்மை உள்ளதா? அவர் மரணத்தில் எத்தனை மர்மங்கள் உள்ளன. கட்சி தலைவிக்கு துரோகம் செய்தவர்கள் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும். இவர்களை ஆட்சியில் தொடர விடக்கூடாது. மக்களின் கோரிக்கைகள் நிறைவேற வேண்டும் என்றால் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களியுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து அவர் செக்காரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார்.

இந்த பிரசாரத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., நெல்லை கிழக்கு மாவட்ட செயலாளர் ஆவுடையப்பன், முன்னாள் அமைச்சர் பூங்கோதை, மாநில மாணவர் அணி துணை செயலாளர் உமரிசங்கர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்