எட்டயபுரம் அருகே துணிகரம்: அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 32 பவுன் நகை கொள்ளை பட்டப்பகலில் மர்மநபர்கள் கைவரிசை
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 32 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
எட்டயபுரம்,
எட்டயபுரம் அருகே சிந்தலக்கரையில் அங்கன்வாடி ஊழியர் வீட்டில் 32 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
அங்கன்வாடி ஊழியர்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள சிந்தலக்கரையை சேர்ந்தவர் கந்தசாமி மகன் ரகுபதி (வயது 36). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அவருடைய மனைவி சாரதா (34). இவர் அங்கன்வாடியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு அஸ்வந்த் (4), மதுஸ்ரீ (2) என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
சாரதா தனது குழந்தைகளுடன் கோவில்பட்டி அய்யனேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். சிந்தலக்கரையில் கந்தசாமியின் வீடும், ரகுபதியின் வீடும் தனித்தனியாக உள்ளது. இதனால் கந்தசாமி மட்டும் தினமும் மாலையில் மகன் வீட்டுக்கு சென்று மின்விளக்கை போடுவதும், பின்னர் மறுநாள் காலையில் சென்று மின்விளக்கை அணைத்துவிட்டு வருவதும் வழக்கம். அதன்படி கந்தசாமி நேற்று மாலை மின்விளக்கை போடுவதற்கு சென்றுள்ளார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
32 பவுன் கொள்ளை
உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 32 பவுன் நகைகள் மற்றும் வெள்ளி பொருட்களை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த கந்தசாமி இதுபற்றி தனது மருமகள் சாரதாவுக்கு தகவல் தெரிவித்தார். அவர் உடனடியாக விரைந்து வந்தார்.
பின்னர் இதுகுறித்து எட்டயபுரம் போலீசில் சாரதா புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சேகர், ஏட்டு கார்த்திக் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பட்டப்பகலில் அங்கன்வாடி ஊழியர் வீட்டின் கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.