மாவட்டத்தில் 2 வாரங்களில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை அதிகாரிகள் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கப்பட்டு இருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.;

Update: 2019-05-11 23:00 GMT
நாமக்கல், 

தமிழகத்தில் பிளஸ்-2, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் அடுத்தடுத்து வெளியிடப்பட்டன. அதில், அரசு பள்ளி மாணவ, மாணவிகள் கடந்த ஆண்டை காட்டிலும், அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக நாமக்கல் மாவட்டத்தில், 2019-20-ம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த மாதம் 25-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த இரு வாரங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழிக்கல்வியில், அரசு பள்ளிகளில் அதிக அளவில் மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

இது குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:- சமீபத்தில் வெளியான, எஸ்.எஸ்.எல்.சி. பொதுத் தேர்வில், நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 143 பள்ளிகளில் 109 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை அடைந்து உள்ளன. அதன் காரணமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளது. மேலும் ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று முதல் வகுப்பில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகளை சேர்த்து உள்ளனர்.

நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2 வாரங்களில் பிளஸ்-1 வகுப்பில் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் சேர்ந்து உள்ளனர். அதேபோல் 6-ம் வகுப்பில் தமிழ் வழியில் 700 பேர், ஆங்கில வழியில் 500 பேர் சேர்க்கப்பட்டு உள்ளனர். நாமக்கல் மாவட்டத்தில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வரை, கடந்த இரு வாரங்களில் அரசு பள்ளிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவிகள் சேர்க்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

மேலும் செய்திகள்