தேனி அருகே, ரூ.3½ லட்சத்துடன் சாலையோரம் பிணமாக கிடந்த டாஸ்மாக் ஊழியர் - போலீசார் விசாரணை

தேனி அருகே ரூ.3½ லட்சத்துடன் டாஸ்மாக் ஊழியர் சாலையோரம் பிணமாக கிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

Update: 2019-05-11 22:15 GMT
தேனி

தேனி-போடி சாலையில் தீர்த்தத்தொட்டி அருகில் சாலையோரம் ஒருவர் ஸ்கூட்டருடன் பிணமாக கிடப்பதாக பழனிசெட்டிபட்டி போலீஸ் நிலையத்துக்கு நேற்று காலையில் தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பிணத்தை பார்வையிட்டனர்.

இறந்து கிடந்தவரின் அங்க அடையாளங்களை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது, அவர் போடி தேர்முட்டி தெருவை சேர்ந்த பார்த்திபன் (வயது 43) என்பதும், கோடாங்கிபட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது.

இவர் தினமும் இரவு டாஸ்மாக்கடையை அடைத்து விட்டு வசூலான பணத்தை எடுத்துச் செல்வது வழக்கம். அவ்வாறு இரவில் எடுத்துச் செல்லும் பணத்தை மறுநாள், டாஸ்மாக் நிறுவன வங்கி கணக்கில் செலுத்தி வந்துள்ளார். அதன்படி நேற்று முன்தினம் இரவில் கடையை அடைத்து விட்டு வசூலான பணம் ரூ.3 லட்சத்து 57 ஆயித்துடன் ஸ்கூட்டரில் புறப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவர் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. டாஸ்மாக் கடையில் வசூலான பணத்தை போலீசார் தேடிப் பார்த்தபோது, அவருடைய ஸ்கூட்டரில் இருந்த பெட்டிக்குள்ளேயே அவை பத்திரமாக இருந்தது. இதையடுத்து அந்த பணத்தை போலீசார் கைப்பற்றினர்.

இதையடுத்து அவரது பிணத்தை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்ட பணத்தை டாஸ்மாக் நிறுவன அதிகாரிகளிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்