துறையூர் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த முதியவர் உள்பட 2 பேர் கைது
துறையூர் அருகே கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த முதியவர் மற்றும் அதை விற்றவரை போலீசார் கைதுசெய்தனர். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
துறையூர்,
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உப்பிலியபுரம் டி.முருங்கப்பட்டி காட்டு கொட்டகை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 67). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி உண்ணாமலை. இவர்களின் மகன் பெரியசாமி(25), மகள் கவிதா(14). இந்த நிலையில் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலைக்கு சென்ற பழனிசாமி இரவில் வீட்டுக்கு வந்தார்.
அப்போது, அவருக்கும், அவருடைய மனைவி, மகன், மகள் ஆகிய 3 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பழனிசாமி, தான் வீட்டில் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை எடுத்து, அவர்கள் 3 பேரையும் மிரட்டினார். உடனே சுதாரித்துக்கொண்ட பழனிசாமியின் மகள் கவிதா, தனது செல்போனில் ‘100’ என்ற அவசர உதவி எண் மூலம் காவல் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நடந்த விவரங்களை கூறினார்.
உடனே கட்டுப்பாட்டு அறையில் இருந்த போலீசார், உப்பிலியபுரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து உப்பிலியபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், துப்பாக்கிகள் அனைத்தையும் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கும்படி போலீசார் அறிவித்து இருந்த நிலையில், பழனிசாமியிடம் துப்பாக்கி இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் பழனிசாமியிடம் இருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்து, அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று, அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்று விசாரணை நடத்தினார்கள். விசாரணையில், சூக்கலாம்பட்டியை சேர்ந்த மூர்த்தி(48) என்பவரிடம் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் அந்த நாட்டுத்துப்பாக்கியை பழனிசாமி வாங்கியது தெரியவந்தது.
இதைதொடர்ந்து மூர்த்தியை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அந்த துப்பாக்கிக்கான எந்த ஒரு ஆவணமும் இல்லை என்றும், அது கள்ளத்துப்பாக்கி என்பதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து உப்பிலியபுரம் போலீசார் கள்ளத்துப்பாக்கி வைத்திருந்த பழனிசாமி, அதை விற்ற மூர்த்தி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
மேலும் அந்த பகுதியில் இதுபோல் யாராவது கள்ளத்துப்பாக்கி வைத்துள்ளார்களா? என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.