நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 300 இடங்களில் வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி திருச்சியில் நடிகர் எஸ்.வி.சேகர் பேட்டி
நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா 300 இடங்களில் வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி என்று நடிகர் எஸ்.வி.சேகர் கூறினார்.
திருச்சி,
திரைப்பட நடிகரும், பாரதீய ஜனதா கட்சி நிர்வாகியுமான எஸ்.வி.சேகர் நேற்று மாலை திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
சமுதாயத்தில் இதுவரை எந்த சலுகையும் இல்லாத பொதுப்பிரிவினருக்கு கல்வி மற்றும் அரசு வேலைவாய்ப்பில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய பிரதமர் நரேந்திரமோடிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பாராட்டு விழா தென்மண்டல பிராமணர் சங்க கூட்டமைப்பு (பெபாஸ்) சார்பில் திருச்சி சத்திரம் ஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி வளாகத்தில் வருகிற 18-ந் தேதி(சனிக்கிழமை) மாலை 6 மணிக்கு நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் நான் (எஸ்.வி.சேகர்) மற்றும் தேவநாதன் யாதவ், டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, டாக்டர் ரவிச்சந்திரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பல்வேறு சமுதாய தலைவர்கள் கலந்து கொண்டு பேசுகிறார்கள். பொதுப்பிரிவில் வாழ்க்கை தரத்தில் நலிந்தவர்களுக்கு செய்யக்கூடிய நீதி, போராடினால்தான் கொடுக்க வேண்டும் என்று இல்லாமல், பல கடிதங்கள் வாயிலாக வைத்த கோரிக்கை அடிப்படையில் இந்த இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் ஊடகங்கள் கருத்து கணிப்பு என்ற பெயரில் பொய்யான தகவலை பரப்பி வருகிறது. ஏனென்றால், ஒவ்வொரு ஊடகமும் ஒரு அரசியல் கட்சியை சார்ந்துதான் உள்ளது. மக்கள் தங்களது நிலைப்பாட்டை ஊடகத்தினரிடம் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.
எனவே, நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாரதீய ஜனதா கட்சி வெற்றி பெற்று, மோடி மீண்டும் பிரதமர் ஆவது உறுதி. தற்போதைய தேர்தலில் தரம் தாழ்ந்த விமர்சனங்களை அரசியல் கட்சியினர் பேசி வருகிறார்கள். சில ஊடகங்கள் மோடியை திருடன் என்று சொல்வதை நாகரிகம் போலவும், காங்கிரசை மோடி குற்றஞ்சாட்டினால் அநாகரிகம் போலவும் கருத்துகள் பரிமாறப்படுகிறது.
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் டி.டி.வி.தினகரன் கட்சியை விட, கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யம் கட்சி அதிக வாக்குகளை பெறும். கிட்டத்தட்ட 6 சதவீத வாக்குகளை பெறுவார்கள். அடுத்து வர உள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் தவிர்க்க முடியாத சக்தியாக கமல்ஹாசன் கட்சி இருக் கும். தமிழ்நாட்டில் 22 சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தல் முடிவுகளால் அ.தி.மு.க. ஆட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. இதனால், பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டு விடாது. ரஜினிகாந்த் நல்ல நண்பர். தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் வரும்போது நிச்சயம் அவரும் அரசியலுக்கு வருவார். அவரது தலைமை கூட தமிழகத்தில் வரலாம்.
தற்போது விஷால் தலைமையிலான நடிகர் சங்கம் காலாவதியாகி விட்டது. அவர்கள் கூட்டும் எந்த கூட்டமும் செல்லுபடியாகாது. ஆக்கிரமிப்பில் உள்ள நடிகர் சங்க இடத்தை அதற்கு உரியவர்களிடமே ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.