அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று தீவிர பிரசாரம்

அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக, அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

Update: 2019-05-11 22:00 GMT
ஓட்டப்பிடாரம், 

அ.தி.மு.க. வேட்பாளர் மோகனுக்கு ஆதரவாக, அமைச்சர்கள் வீதி வீதியாக சென்று, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

அமைச்சர் ராஜலட்சுமி

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் நேற்று காலையில் தெய்வசெயல்புரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தை ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர்கள் வடக்கு காரசேரி, காசிலிங்காபுரம், சிங்கத்தாகுறிச்சி, கீழ பூவாணி, மேல பூவாணி, லட்சுமிபுரம், சவலாப்பேரி, ஆலந்தா, உழக்குடி, கலியாவூர், கோனார்குளம், வல்லநாடு, முருகன்புரம், வல்லகுளம், எல்லைநாயக்கன்பட்டி, செட்டிமல்லன்பட்டி, சீத்தாகுளம், புதுப்பட்டி ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று, இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

சவலாப்பேரியில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் ராஜலட்சுமி பேசியதாவது:-

தி.மு.க. இடையூறு

தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து மின்னணு குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் தலா ரூ.1,000 வழங்கியது. அதனை பொறுத்து கொள்ள முடியாத தி.மு.க.வினர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். அதேபோன்று ஏழைகளுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்துக்கும் தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத்தை நாடியது. இவ்வாறு தமிழக அரசு ஒவ்வொரு முறையும் ஏழைகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும்போது, அதற்கு தி.மு.க. இடையூறு செய்கிறது. எனவே ஏழைகளுக்கு நலத்திட்டங்களை எப்போதும் வழங்கி வரும் அ.தி.மு.க. அரசு தொடர வேண்டும். அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் ஏற்கனவே எம்.எல்.ஏ.வாக 5 ஆண்டுகள் இங்கு திறம்பட பணியாற்றி உள்ளார். எனவே அவரது மக்கள் நலப்பணிகள் மீண்டும் தொடரும் வகையில், இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து, அவரை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் ராஜலட்சுமி பேசினார்.

அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

பின்னர் மாலையில் அ.தி.மு.க. வேட்பாளர் மோகன் வெங்கடாசலபுரத்தில் பிரசாரத்தை தொடங்கினார். பிரசாரத்தை பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர்கள் வாலசமுத்திரம், குறுக்குசாலை, தெற்கு சிந்தலக்கட்டை, பெரியநத்தம், அகிலாண்டபுரம், வடக்கு ஆவரங்காடு, பாஞ்சாலங்குறிச்சி, கவர்னகிரி, சிலோன் காலனி, ஓட்டப்பிடாரம், வடக்கு பரம்பூர், முப்புலிவெட்டி, புதியம்புத்தூர் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலை சின்னத்தில் வாக்கு சேகரித்தனர்.

வாலசமுத்திரத்தில் நடந்த பிரசாரத்தில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-

எளிமையான முதல்-அமைச்சர்

பெருந்தலைவர் காமராஜருக்கு பிறகு மக்கள் விரும்பும் எளிமையான முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமி திகழ்கிறார். அவர், மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக மீனவர்கள், உப்பள தொழிலாளர்கள் பயன்பெறும் வகையில், ஏராளமான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஓட்டப்பிடாரம் தொகுதியில் அனைத்து சாலைகளும் புதிதாக அமைக்கப்படும்.

தமிழகத்தில் மாற்றம் வரும் என்று கூறி, புதிய கட்சிகளை தொடங்கியவர்களுக்கு ஏமாற்றமே வரும். இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். வருகிற 2021-ம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் அனைத்து திட்டங்களையும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சிறப்பாக நிறைவேற்றி வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி என்றும் நிலைத்து நிற்கும்

அ.தி.மு.க.வில் இருந்து பிரிந்து சென்ற அ.ம.மு.க.வினர் அ.தி.மு.க.வின் கரைவேட்டிகளையே அணிகின்றனர். இடைத்தேர்தலுக்கு பின்னர் டி.டி.வி.தினகரனின் கூடாரம் காலியாகி விடும்.

அ.தி.மு.க.வுக்கு துரோகம் செய்த எவரும் நன்றாக வாழ்ந்ததாக சரித்திரம் கிடையாது. அ.தி.மு.க.வின் ஆட்சி என்றும் நிலைத்து நிற்கும். மற்றவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். ஓட்டப்பிடாரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சின்னப்பனுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

இவ்வாறு அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசினார்.

அப்போது எம்.எல்.ஏ.க்கள் மனோகரன் (வாசுதேவநல்லூர்), சந்திரபிரபா முத்தையா (ஸ்ரீவில்லிபுத்தூர்), முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன், முன்னாள் தொகுதி செயலாளர் புகழும் பெருமாள், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் டேக்ராஜா மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்