காப்பகத்திற்கு பஸ்சில் அழைத்து வந்த பிளஸ்-1 மாணவியை கடத்திய தந்தை உள்பட 2 பேர் கைது

காப்பகத்திற்கு பஸ்சில் அழைத்து வந்த பிளஸ்-1 மாணவியை கடத்திய தந்தை உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.;

Update: 2019-05-11 22:00 GMT
நல்லம்பள்ளி,

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள 17 வயது சிறுமிக்கும், உறவினர் ஒருவருக்கும் மணமகன் வீட்டில் நேற்று முன்தினம் இளம்வயது திருமணம் நடப்பதாக தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் செயல்படும் 1077 என்ற எண்ணிற்கு தகவல் வந்தது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க கலெக்டர் மலர்விழி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் ஊர்நல அலுவலர் சரோஜா, சைல்டுலைன் நிர்வாகி வைத்தீஸ்வரி மற்றும் பென்னாகரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது சிறுமிக்கு 17 வயது என்பதும், அவர் பிளஸ்-1 படித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் இளம்வயது திருமணத்தை தடுத்து நிறுத்தி மாணவியை தொப்பூர் அருகே குறிஞ்சி நகரில் உள்ள காப்பகத்தில் சேர்க்க பஸ்சில் அழைத்து வந்தனர். அப்போது தர்மபுரி கலெக்டர் பங்களா அருகில் சென்ற போது மாணவியின் தந்தை உள்ளிட்ட 30 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சை வழிமறித்து அலுவலர் சரோஜா, சைல்டுலைன் நிர்வாகி வைத்தீஸ்வரி ஆகியோரை தாக்கிவிட்டு மாணவியை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றனர்.

இதுகுறித்து ஊர்நல அலுவலர் சரோஜா, அதியமான்கோட்டை போலீசில் மாணவியின் தந்தை உள்பட 30 பேர் மீது புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து மாணவியின் தந்தை மற்றும் உறவினர் சின்னவேலன் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் மாணவியை மீட்டு குறிஞ்சி நகர் காப்பகத்தில் போலீசார் ஒப்படைத்தனர்.

மேலும் செய்திகள்