தண்ணீரின்றி வறண்ட தேர்த்தங்கல் சரணாலயம் திரும்பி செல்ல முடியாமல் திகைக்கும் பறவைகள்
தண்ணீரின்றி வறண்டு கிடக்கும் தேர்த்தங்கல் சரணாலயத்திற்கு இனப்பெருக்கத்திற்காக வந்த பறவைகள் அதற்கான சூழ்நிலை இல்லாததால் திரும்பி செல்ல முடியாமல் வாடி பட்டுபோன மரங்களில் திகைத்து நிற்கின்றன.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, தேர்த்தங்கல், சித்திரங்குடி, மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், காஞ்சிரங்குளம் ஆகிய பறவைகள் சரணாலயங்கள் உள்ளன. நீர்நிலைகளில் அமைந்துள்ள இந்த சரணாலயங்கள் பெயரளவிலேயே இருந்து வருகின்றன. இதற்கு காரணம் இந்த சரணாலயங்களில் தண்ணீர் இன்றி வறண்டுபோய் மரங்கள் அனைத்தும் பட்டுபோய் உள்ளன. கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இதேநிலை தான் நீடித்து வருகிறது.
கடந்த காலங்களில் இந்த சரணாலயங்களில் வைகை தண்ணீர், மழைநீர் அனைத்தும் தேக்கி வைக்கப்பட்டு பறவைகளுக்கு ஏற்ற சூழல் நிலவியது. இதன்காரணமாக உள்ளுர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் இந்த சரணாலயங்களை நாடி வந்து கூடு கட்டி, முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்களின் சந்ததியினருடன் தங்கள் இருப்பிடத்தை நோக்கி திரும்பி செல்வது வழக்கம். இந்த நடைமுறை சங்கிலி கோர்வை போன்று ஆண்டாண்டு காலமாக நடைபெற்று வந்தது.
இந்த சுழற்சி முறைக்கு தடைபோடும் வகையில் கடந்த 3 ஆண்டுகளாக போதிய பருவமழை இல்லாமலும், வைகை தண்ணீரும் பெயரளவில் வந்ததாலும், முழுமையாக பெரிய கண்மாயில் வைகை தண்ணீரை தேக்கி வைக்காமல் அனைத்து நீர்நிலைகளுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டதாலும் சரணாலயங்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டது. குறிப்பாக ராமநாதபுரம் அருகே உள்ள தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் மற்ற சரணாலயங்களுக்கு பறவைகள் வரத்து குறைவாக வந்த காலத்தில் கூட இங்கு அதிகளவில் பறவைகள் வந்து இனப்பெருக்கத்தில் ஈடுபட்டு வந்துள்ளது.
அதேபோல இந்த ஆண்டும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு தண்ணீரை எதிர்பார்த்து வந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு பறவைகள் ஏமாற்றம் அடைந்துள்ளன. வழக்கத்திற்கு மாறாக தண்ணீரின்றி தேர்த்தங்கல் சரணாலயம் வறண்டுபோய் காணப்படுகிறது.
தண்ணீரில்லாததால் சரணாலயத்தில் உள்ள மரங்கள் அனைத்தும் பட்டுபோய் வாடி வதங்கி காணப்படுகிறது. இதனால் இனப்பெருக்கத்திற்காக வந்த பறவைகள் அனைத்தும் இருக்கவும் முடியாமல், செல்லவும் முடியாமல் திகைத்து திணறி செய்வதறியாது பட்டுப்போன மரங்களில் கவலையுடன் நிற்கின்றன. சரணாலயங்களில் ரீங்காரமிடும் பறவைகளையும், அதன் குஞ்சுகளையும் பார்த்து பழகிய நிலையில் இதுபோன்று பறவைகள் செய்வதறியாது திகைத்து நிற்பதை காணும்போது கவலை அளிப்பதாக உள்ளது. எஞ்சி இருக்கும் இந்த பறவைகளை காக்க தேர்த்தங்கல் சரணாலயத்தில் தேவையான நேடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதே நிலை நீடித்தால் இந்த பக்கமே இனி பறவைகள் எட்டிபார்க்காத நிலை ஏற்படும்.