கிருஷ்ணகிரியில் பலத்த சூறைக்காற்றுடன் மழை மின் தடையால் நகரமே இருளில் மூழ்கியது
கிருஷ்ணகிரியில் பலத்த சூறைக்காற்றுடன் விடிய, விடிய மழை பெய்தது. இந்த மழையால் பிரதான சாலையில் உள்ள மின் கம்பம் சாய்ந்ததால் நகரமே இருளில் மூழ்கியது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி நகரில் கடந்த சில நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்தது. மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி உள்பட பல இடங்களில் மழை பெய்த போதும் கிருஷ்ணகிரியில் மட்டும் மழை பெய்யாமல் இருந்து வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு 105 டிகிரியை தாண்டி வெயில் கொளுத்தியதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணி அளவில் கிருஷ்ணகிரியில் திடீரென்று பலத்த சூறைக்காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது. இந்த சூறைக்காற்றுக்கு கிருஷ்ணகிரி-பெங்களூரு சாலையில் பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு நுழைவுவாயிலில் உள்ள மின் கம்பம் சாலையில் சாய்ந்தது. இதன் காரணமாக அந்த பகுதியில் மின் தடை ஏற்பட்டது. உடனடியாக கிருஷ்ணகிரி நகரில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் நகரமே இருளில் மூழ்கியது.
நகரில் சுமார் 2 மணி நேரம் மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து சாய்ந்த மின் கம்பத்தை சீரமைக்கும் பணி நடந்தது. இதன் காரணமாக காலை 5.30 மணி அளவிலேயே மின்சாரம் வந்தது. சுமார் 6 மணி நேரம் கிருஷ்ணகிரி நகரில் மின்சாரம் இல்லாததால் வயதானவர்கள், குழந்தைகள் தூங்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டார்கள்.
கிருஷ்ணகிரி நகரில் பெய்த மழையால் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானம் முழுவதும் குளம் போல தண்ணீர் தேங்கியது. மேலும் பலத்த சூறைக்காற்றின் காரணமாக நகரின் பல இடங்களில் மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தன. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி நகரில் 15.60 மில்லி மீட்டர் மழையும், நெடுங்கல்லில் 8.40 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. நேற்றும் பிற்பகல் முதல் வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. மாவட்டத்தின் பிற இடங்களிலும் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் அளவு குறைவாகவே இருந்தது.