குழந்தைகள் விற்பனை வழக்கு: சேலம் நர்சை காவலில் விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு
குழந்தைகள் விற்பனை வழக்கில் சேலம் நர்சை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.
சூரமங்கலம்,
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் குழந்தைகள் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர்(நர்சு) அமுதவள்ளி, அவருடைய கணவர் ரவிச்சந்திரன், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஹசீனா, ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் மற்றும் புரோக்கர்கள் அருள்சாமி, லீலா, செல்வி ஆகிய 8 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தநிலையில் இந்த வழக்கில் கைதான அமுதவள்ளி, முருகேசன், பர்வின், ஹசீனா, அருள்சாமி ஆகியோரை நாமக்கல் கோர்ட்டு உத்தரவின் பேரில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான நர்சு அமுதவள்ளி, குழந்தைகள் விற்பனையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஈடுபட்டு உள்ளது தெரிய வந்தது.
மேலும் காவலில் எடுத்தவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலம் 24 பெண் குழந்தைகள், 6 ஆண் குழந்தைகள் என மொத்தம் 30 குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதில் சில குழந்தைகளை சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சுகாதார செவிலியர் உதவியாளராக(நர்சு) பணியாற்றும் சாந்தி(வயது48) என்பவரிடம் கொடுத்துள்ளார். இதையடுத்து அவர், குழந்தை இல்லாதவர்களுக்கு அந்த குழந்தைகளை பல லட்ச ரூபாய்க்கு விற்று பணத்தை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து நேற்று முன்தினம் சாந்தியை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர். மேலும் அவரை விசாரணை நடத்தினால் குழந்தைகள் விற்பனை வழக்கில் சேலத்தை சேர்ந்த வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பது தெரியவரும். இதனால் சாந்தியை விரைவில் காவலில் எடுத்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடிவு செய்துள்ளனர்.