‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியில் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த முடிவு அகழியும் தூர்வாரி, ஆழப்படுத்தப்படுகிறது
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் ரூ.9 கோடியில் வேலூர் கோட்டையை அழகுப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வேலூர்,
வேலூர் மாநகரின் மையப்பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க கோட்டை அமைந்துள்ளது. அழகிய அகழியுடன் கூடிய பிரம்மாண்டமான கோட்டை வேலூரின் அடையாளமாகவும் திகழ்கிறது. இக்கோட்டையினுள் ஜலகண்டேஸ்வரர் கோவில், அருங்காட்சியம், காவலர் பயிற்சி பள்ளி மற்றும் பல்வேறு அரசுத்துறைகளும் உள்ளது. கோட்டையின் கட்டிடக்கலையை காண தினமும் சுற்றுலா பயணிகள் பலர் வருகின்றனர். சி.எம்.சி. மருத்துவமனைக்கு வரும் வடமாநிலத்தவர்களும் கோட்டையை காண தவறாமல் வந்து விடுகின்றனர்.
பெருமைமிகு இக்கோட்டையை மேம்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கோட்டையை சுற்றி உள்ள அகழியில் குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது. கோட்டையின் இடதுபுறம், பின்புறம் உள்ள அகழி புதர்மண்டி கிடக்கிறது. இதனை அகற்றி அகழியை அழகாக மாற்ற வேண்டும் என்றும் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வேலூர் மாநகரில் பல்வேறு சீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வேலூரின் அடையாளமான கோட்டையை அழகுப்படுத்த இத்திட்டத்தின் கீழ் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் முதல்கட்டமாக வேலூர் கோட்டை அகழியை ஆழப்படுத்தி, தூர்வாரவும், கோட்டைக்குள் நடைபாதை அமைக்கவும், பசுமை மிகுந்த வேலூர் கோட்டையாக மாற்றவும் ரூ.9 கோடியில் முதல்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டு விட்டது. மேலும் இதற்கான டெண்டரும் விடப்பட்டுள்ளது.
கோட்டை அகழியை எத்தனை அடிக்கு ஆழப்படுத்த வேண்டும் என்பது குறித்தும், எந்தெந்த வகையில் கோட்டையை அழகுப்படுத்தலாம் என்பது குறித்தும் தொல்லியல் துறையிடம் ஆலோசனை பெறப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறோம். மேலும், சவுண்ட் சிஸ்டத்துடன் கூடிய நவீன மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது. அதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.