குடிநீர் கேட்டு, ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

குடிநீர் கேட்டு ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2019-05-10 22:30 GMT
கன்னிவாடி,

ஒட்டன்சத்திரம் தாலுகா ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் கன்னடப்பட்டி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இந்த பகுதி மக்களுக்கு 7 ஆழ்துளை கிணறுகள் மற்றும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆழ்துளை கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. மேலும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. இதன் காரணமாக தண்ணீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

மேலும் இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று குடிநீர் கேட்டு ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது தங்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மாலிக், விஜயசந்திரிகா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்திதேவி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் கன்னடப்பட்டி பகுதி மக்களுக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். புதிய ஆழ்துளை கிணறுகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்