திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், நவீன அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரக கற்கள் அகற்றம்
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில், நவீன அறுவை சிகிச்சையில் சிறுநீரக கற்கள் அகற்றப்பட்டன.
முருகபவனம்,
திண்டுக்கல் ராஜக்காபட்டியை சேர்ந்தவர் சுப்புக்காளை. இவரது மனைவி குள்ளம்மாள் (வயது 55). கடந்த 3 மாதங்களாக காய்ச்சல் மற்றும் வயிற்று வலியால் குள்ளம்மாள் அவதிப்பட்டு வந்தார். இதையொட்டி திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு டாக்டர்கள் குள்ளம்மாளுக்கு எக்கோ மற்றும் சி.டி.ஸ்கேன் பரிசோதனை செய்தனர்.
அப்போது குள்ளம்மாளின் சிறுநீரகத்தில் கற்கள் இருப்பதையும், அதனால் அவர் காய்ச்சல், வயிற்று வலியால் அவதிப்பட்டு வருவதை கண்டறிந்தனர். இதையொட்டி அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கற்களை அகற்ற முடிவு செய்தனர்.
அதன்படி நலப்பணிகள் இணை இயக்குனர் மாலதி பிரகாஷ் ஆலோசனைப்படி, மருத்துவமனை கண்காணிப்பாளர் சிவக்குமார், நிலைய மருத்துவ அதிகாரி மகாலட்சுமி வழிகாட்டுதல்படி குள்ளம்மாளுக்கு நவீன அறுவை சிகிச்சை மூலம் சிறுநீரகத்தில் இருந்த கற்கள் அகற்றப்பட்டன. இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் கூறியதாவது:-
பொதுவாக வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிறுநீரகத்தில் உள்ள கற்களை அகற்றுவது வழக்கம். ஆனால் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் முதுகில் துளையிட்டு ‘எண்டோஸ்கோப்பி’ மூலம் சிறுநீரக கற்களை அகற்றுவார்கள். அத்தகைய நவீன வசதி அங்கு உள்ளது. இந்நிலையில் குள்ளம்மாளுக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்யாமல் முதுகில் நுண்துளையிட்டு ‘எண்டோஸ்கோப்பி’ மூலம் சிறுநீரக கற்களை அகற்றுவது என்று முடிவு செய்தோம்.
அரசு தலைமை மருத்துவமனைகளில் இதுவரை அத்தகைய அறுவை சிகிச்சை செய்ததில்லை. தமிழகத்தில் முதல் முறையாக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் நவீன நுண்துளை ‘எண்டோஸ்கோப்பி’ அறுவை சிகிச்சை செய்தோம். மயக்கவியல் டாக்டர் பெக்கி தலைமையில் சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர் நாகராஜ், டாக்டர்கள் சந்திரமுரளி, மேகலா ஆகியோர் அறுவை சிகிச்சை செய்தனர்.
அதில் குள்ளம்மாளின் முதுகில் நுண்துளையிட்டு வலது சிறுநீரகத்தில் இருந்த 22 மில்லிமீட்டர் மற்றும் 9 மில்லி மீட்டர் அளவுள்ள 2 சிறுநீரக கற்களை ‘எண்டோஸ்கோப்பி’ நவீன அறுவை சிகிச்சை மூலம் உடைத்து அகற்றி அரசு டாக்டர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.