தஞ்சையில் 8 இடங்களில், அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் - 3 சதவீத அகவிலைப்படி வழங்க கோரிக்கை

3 சதவீத அகவிலைப்படி வழங்க கோரி தஞ்சையில் 8 இடங்களில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

Update: 2019-05-10 22:30 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை வருமான வரித்துறை அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் நேற்றுகாலை ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு வட்ட செயலாளர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரெங்கசாமி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், கூட்டுறவுத்துறை ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சந்தானலட்சுமணன், வட்ட தலைவர் மதியழகன், மாவட்ட நிர்வாகிகள் கோதண்டபாணி, லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல தஞ்சையில் கூட்டுறவுத்துறை மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், இந்து சமய அறநிலையத்துறை அலுவலகம், காட்டுத்தோட்டம் வேளாண்மைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, பனகல் கட்டிடம், புதிய கலெக்டர் அலுவலகம் ஆகியவற்றிலும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில், இந்த ஆண்டிற்கான 3 சதவீத அகவிலைப்படியை மத்தியஅரசு பிப்ரவரி மாதம் வழங்கியது. தமிழகத்தில் பணி புரியும் மத்தியஅரசு ஊழியர்களும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற உயர் அதிகாரிகளும் அகவிலைப்படியை பெற்றுவிட்டனர்.

ஆனால் மே மாதம் ஆகியும் தமிழகஅரசு இன்னும் அகவிலைப்படியை வழங்காமல் காலம் கடத்தி வருகிறது. நாடாளுமன்ற, சட்டசபை தேர்தல் நடைபெறும் காலங்களில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்று மார்ச் மாதத்தில் அகவிலைப்படி வழங்கிய நிகழ்வுகள் தமிழகஅரசால் இந்த முறை மறுக்கப்பட்டுள்ளது. எனவே ஜனவரி மாதம் முதல் வழங்க வேண்டிய 3 சதவீத அகவிலைப்படியை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்