புதுச்சேரி வெங்கட்டா நகரில் நாளை மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் கலெக்டர் ஆய்வு

புதுவை வெங்கட்டா நகரில் நாளை மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் வாக்குச்சாவடியில் கலெக்டர் அருண், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

Update: 2019-05-10 23:45 GMT

புதுச்சேரி,

புதுவை நாடாளுமன்ற தொகுதியில் கடந்த மாதம் 18–ந் தேதி தேர்தல் நடந்தது. இதில் காமராஜர் நகர் தொகுதியில் வெங்கட்டா நகர் மின் கட்டண வசூல் மைய வாக்குச்சாவடியில் ஓட்டுப்பதிவு தொடங்கி சில மணி நேரம் ஆனபிறகு மாதிரி வாக்குகளை அழிக்காமல் வாக்குப்பதிவு நடத்தியது தெரியவந்தது.

இதனால் அங்கு குளறுபடி ஏற்பட்டதாக அரசியல் கட்சிகள் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நாளை(ஞாயிற்றுக்கிழமை) அங்கு மறு ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட கலெக்டருமான அருண் நேற்று வெங்கட்டாநகர் மின்துறை அலுவலகத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு ஓட்டுப்பதிவு நடைபெற மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். வாக்காளர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா?, மாற்றுத்திறனாளிகள், வயதானவர்கள் வாக்களிக்க வருவதற்கு வசதியாக சாய்தளம் அமைக்கப்பட்டுள்ளதா? என்றும் பார்வையிட்டார். மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தார்.

இந்த ஆய்வின் போது சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா, போலீஸ் சூப்பிரண்டு மாறன் மற்றும் தேர்தல் துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்